Published:Updated:

ஒசூர்: முன்பு மக்கள் போராட்டம்; இப்போது குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - என்னதான் நடக்கிறது?

லாரிகளை நிறுத்தி போராட்டம்
News
லாரிகளை நிறுத்தி போராட்டம்

‘மக்கள் கடுமையாக பாதித்தும், அதே ரோட்டில் லாரிகள் இயக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நிற்பதுதானே நியாயம்?’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒசூர்: முன்பு மக்கள் போராட்டம்; இப்போது குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - என்னதான் நடக்கிறது?

‘மக்கள் கடுமையாக பாதித்தும், அதே ரோட்டில் லாரிகள் இயக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நிற்பதுதானே நியாயம்?’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Published:Updated:
லாரிகளை நிறுத்தி போராட்டம்
News
லாரிகளை நிறுத்தி போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, எட்டு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது’ என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாகப் புகார் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, நவம்பர் 11-ம் தேதி ஒட்டுமொத்த கிராம மக்களும், கிராமத்தைவிட்டு வெளியேறி, 2 கி.மீ தொலைவிலுள்ள புறம்போக்கு நிலத்தில் ‘டென்ட்’ அமைத்து தங்கி போராட்டம் நடத்திவந்தனர்.

கொரட்டகிரி மக்கள் போராட்டம்
கொரட்டகிரி மக்கள் போராட்டம்

எட்டு நாள்கள் போராட்டம் நடந்த நிலையில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையிலான அதிகாரிகள், குவாரி உரிமையாளர்கள், கொரட்டகிரி மக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, ‘குவாரிகளில் அத்துமீறல்கள் தடுக்கப்படும், கிராமத்தினுள் வராமல் லாரிகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதற்காகத் தனிப்பாதை அமைக்கப்படும். இனி மக்களுக்கு பாதிப்புகள் இருக்காது’ என உறுதியளித்தனர். அதிகாரிகளை நம்பி மக்கள், போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக, ‘கிராமத்தின் வழியாக லாரிகளை இயக்க, உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருக்கிறோம்’ எனக் கூறி, மீண்டும் குவாரி உரிமையாளர்கள் கொரட்டகிரி கிராமம் வழியாக, நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளை இயக்கினர். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, லாரிகள் நுழைவதை தடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், லாரிகள் இயக்குவது நிறுத்தப்பட்டது.

ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்யலாமா?

‘நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், கிராம மக்கள் வேண்டுமென்றே போராடுகின்றனர்’ எனக் கூறி, ஓசூர் சுற்றுப்பகுதி குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த இரண்டு நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 60 குவாரிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இது தொடர்பாக மக்களிடம் பேசினோம். ``எங்கள் கிராமத்தின் வழியாக வாகனங்கள் செல்வதால், பல பேர் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். குழந்தைகள் ரோட்டில் நடமாட முடிவதில்லை. இரவெல்லாம் வெடி வைப்பதால், வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. லாரிகள் செல்வதால் துாசு பறந்து, வாழவே முடியாத சூழல் ஏற்படுகிறது.

லாரிகளை ரோட்டில் நிறுத்தி ஆக்கிரமிப்பு
லாரிகளை ரோட்டில் நிறுத்தி ஆக்கிரமிப்பு

அன்று, குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், அதிகாரிகள், லாரிகள் செல்ல மாற்றுப்பாதையை பயன்படுத்துவதாகச் சொன்ன வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால், மீண்டும் லாரியை இயக்க நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்றிருப்பதாகக் கூறுகின்றனர். கடுமையாக பாதிக்கப்படும் சாதாரண மக்கள் நலனுக்காகத் தீர்ப்பளிக்காமல், குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழியாக லாரிகள் இயக்கப்பட்டால், மீண்டும் பெரிய அளவில் போராடுவோம். தற்போது, வேலை நிறுத்தம் என்ற பெயரில், ரோட்டை நாங்கள் பயன்படுத்த முடியாத வகையில், 15 லாரிகளை நிறுத்திவிட்டு ஆக்கிரமிப்பு செய்து, அட்டூழியம் செய்கின்றனர்’’ என்றனர்.

‘வேண்டுமென்றே போராடுகின்றனர்!’

போராட்டத்தின் நோக்கம் என்ன, லாரிகளை ரோட்டில் நிறுத்திச் சென்றது சரியா என்ற கேள்விகளுடன், குவாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சம்பங்கியிடம் பேசினோம். ‘‘மாற்றுப்பாதை அமைத்துத் தருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்றுவரை அதற்கான எவ்வித ஏற்பாட்டையும் அரசு மேற்கொள்ளவில்லை. லாரிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கொரட்டகிரி வழியாக லாரிகளை இயக்க அனுமதி பெற்றிருக்கிறோம். ஆனாலும், மக்கள் வேண்டுமென்றே போராட்டம் நடத்துகின்றனர். ரோட்டில் நிறுத்திய லாரிகளை எடுப்பதற்குக்கூட மக்கள் அனுமதிக்காமல் போராடுவதால், லாரிகள் ரோட்டிலேயே நிற்கின்றன" என்றார்.

கிராமத்தை காலி செய்து போராடிய மக்கள்.
கிராமத்தை காலி செய்து போராடிய மக்கள்.

மாற்றுப்பாதை ஏன் அமைக்கவில்லை எனக் கேட்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா ஆகியோரைப் பலமுறை போனில் தொடர்புகொண்டும், அவர்கள் நமக்கு பதிலளிக்கவில்லை.

‘மக்கள் கடுமையாக பாதித்தும், அதே ரோட்டில் லாரிகளை இயக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நிற்பதுதானே நியாயம்?’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.