Published:Updated:

`ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் சிறப்புக் குழு’ - சென்னையில் வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைந்துள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவாகும் நபர்களின் எண்ணிக்கை 1000-த்தை தொட்டு உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது தமிழக அரசு.

சென்னை
சென்னை

அந்த வகையில் சென்னையில் வைரஸைக் கட்டுப்படுத்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்னையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வடக்கு சென்னை மண்டலத்துக்கு மகேஷ் குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்துக்கு ஆபாஷ் குமார், தெற்கு மண்டலத்துக்கு அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டலத்துக்கு அபய் குமார் சிங், சென்னை புறநகர் பகுதிகளுக்கு புவனேஷ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உருக்குலைந்த ஊரடங்கு.... விழித்துக்கொண்ட அரசு... தப்பிக்குமா சென்னை?

கொரோனா தடுப்பு தொடர்பாக அரசு அறிவிக்கும் திட்டங்களைத் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்களுக்குத் துரிதமாக எடுத்துச் செல்வது, தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்குவது, முறையான சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிப்பது போன்ற அனைத்துப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது.

கொரோனா கண்காணிப்புப் பகுதி
கொரோனா கண்காணிப்புப் பகுதி

1992-ம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நடந்த பல்வேறு இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின்போது முதல் வரிசையில் நின்று களப்பணியாற்றியுள்ளார். குறிப்பாக, கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் தீ விபத்து, 2004 சுனாமி ஆகிய பேரழிவுகளின்போது ஏற்பட்ட நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டார் எனப் பாராட்டப்பட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பகமான அதிகாரியாக அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரச் செயலராகவும் இருந்துள்ளார். இந்நிலையில்தான் தற்போது கொரோனா நோய் தடுப்புப் பணிகளிலும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

`ரெட்ஜோனில் சென்னை உட்பட 129 மாவட்டங்கள்!’- மே 3-க்குப் பிறகு மத்திய அரசின் ஆக்‌ஷன் பிளான் #Lockdown
அடுத்த கட்டுரைக்கு