Published:Updated:

நீலகிரி:`வழக்கமான சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது!’ - மலை ரயில் சர்ச்சைக்கு ரயில்வே விளக்கம்

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

மலை ரயிலை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்குக் கொடுப்பது வழக்கத்திலிருக்கிறது. இதேபால், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று வாடகைக்கு எடுத்திருக்கிறது.

சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு நிலவும் குளிர்ந்த காலநிலை, மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள், காட்சி முனைகள், பூங்காக்கள், புல்வெளிகள் எனப் பலவும் பயணிகளை ஈர்க்கும் காரணிகளாக இருந்தாலும், அவற்றில் நீலகிரி மலை ரயிலும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருந்துவருகிறது.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

யுனெஸ்கோவின் பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்ற, நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த மலை ரயில் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. மேலும், பல்சக்கர தண்டவாள அமைப்பில் மலைச் சரிவுகளில் இயக்கப்படுவதால், சர்வதே அளவில் சிறப்பைப் பெற்றிருக்கிறது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் பலரும் இந்த மலை ரயிலில் பயணிக்கவே நீலகிரிக்கு வருகை தருகின்றனர். கொரோனா பொதுமுடக்கம் காரணாமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டாலும், மலை ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

அவ்வப்போது சோதனை ஓட்டங்கள் மட்டுமே நடைபெற்றுவந்த நிலையில், பயணிகள் சேவை எப்போது தொடங்கப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நீலகிரி மலை ரயில் சேவை தனியாருக்கு வழங்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின. மேலும், பயணம் செய்ய நபர் ஒருவருக்குக் கட்டணமாக ரூ.3,000 வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.

நீலகிரி: `மலை ரயில் சேவை விரைவில் தொடங்கும்!' - தென்னக ரயில்வே

இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர். கோவை எம்.பி நடராஜனும் இது தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

ஆனால், தனியார் நிறுவனம் ஒன்று வாடகைக்கு மட்டுமே ரயிலை எடுத்திருக்கிறது. தனியார் மயமாக்கப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தனது தரப்பு விளக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

தனியார்மய சர்ச்சை குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில்,``கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மலை ரயில் இயக்கப்படாமல் இருக்கிறது. தனியார் நிறுவனம் சார்பில், மலை ரயிலை இயக்க குறிப்பிட்ட சில நாள்களுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். மலை ரயில் தனியாருக்கு வழங்கப்படவில்லை. வாடகைக்கு மட்டுமே விடப்பட்டிருக்கிற. ஆனால், சிலர் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர்.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

மலை ரயிலை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிப்பது வழக்கத்தில் இருக்கிறது. இதேபால், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று வாடகைக்கு எடுத்திருக்கிறது. இவர்கள் நிறுவனத்தின் பெயரை ரயில் பெட்டி மற்றும் இருக்கையில் அச்சிட்டதாலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வழக்கமாக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு இயக்கப்படும் பயணிகள் மலை ரயில் சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மலை ரயில் இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. மலை ரயில் இயக்கும்போது, ஏற்கெனவே பெறப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது’’ எனத் தெரிவித்தனர்

அடுத்த கட்டுரைக்கு