Published:Updated:

நீலகிரி: மரம் விழுந்து பெண் உயிரிழப்பு... அவலாஞ்சி சாலையில் மண்சரிவு - ஒருவாரமாகத் தொடரும் கனமழை

நீலகிரி

கூடலூர் ஓவேலி பகுதியில் சில்வரோக் மரம் விழுந்ததில் தோட்ட தொழிலாளி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார்.

நீலகிரி: மரம் விழுந்து பெண் உயிரிழப்பு... அவலாஞ்சி சாலையில் மண்சரிவு - ஒருவாரமாகத் தொடரும் கனமழை

கூடலூர் ஓவேலி பகுதியில் சில்வரோக் மரம் விழுந்ததில் தோட்ட தொழிலாளி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார்.

Published:Updated:
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாகப் பலத்த காற்றுடன் இடைவிடாத தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழை தீவிரமடைந்திருக்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தொடர் மழை காரணமாகப் பல இடங்களில் ஊற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சில இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் நீடிக்கிறது. அதேபோல ராட்சத அந்நிய மரங்கள் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் விழுந்து சேதத்தை ஏற்படுத்திவருகின்றன.

மீட்புப் பணி
மீட்புப் பணி

கூடலூர் ஓவேலி பகுதியில் சில்வரோக் மரம் விழுந்ததில் தோட்ட தொழிலாளி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார். அதேபோல் ஊட்டி- அவலாஞ்சி சாலையில் எல்லக்கண்டி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத யூக்காலிப்டஸ் மரமும் வேரோடு சாய்ந்தது. பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. அதேபோல், எரியவயல் பகுதியில் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

மழையால் கூடலூர் நூலகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நூல்கள் சேதமடைந்தன. தெப்பக்காடு பகுதியில் மாயாற்றின் குறுக்கே உள்ள பாலத்துக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றைக் கடக்க ஆபத்தான பயணத்தை வாகன ஓட்டுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மீட்பு பணிகளில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் என அனைத்து அரசுத் துறையினரும் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர். மழை மேலும் தீவிரமடைந்தால் பாதிப்பு அதிகமாகும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மண் சரிவு
மண் சரிவு

மழை பாதிப்புகள் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ``கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை சற்று தீவிரமாகப் பெய்து வருகிறது. மீட்புப் பணிகளை உடனுக்குடன் செய்து வருகிறோம். ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்றார்.