Published:Updated:

`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை!’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

``சென்னை மற்றும் அதன் புறநகரில் அடுத்த இரு தினங்களுக்குக் கன மழை தொடரும்.”

பாலசந்திரன்
பாலசந்திரன்

சென்னையில் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த சிலமணி நேரங்களில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது.

மழை
மழை

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்

ஒரே நேரத்தில் மாறுபட்ட வானிலை - வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் இந்தியா!

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பொழிய வாய்ப்புள்ளது.

சென்னை விழுப்புரம் கடலூர் புதுவை டெல்டா மாவட்டங்கள் அரியலூர் பெரம்பலூர் சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்பிருக்கிறது.

பருவ மழை
பருவ மழை

மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும்( 22, 23) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகரில் அடுத்த இரு தினங்களுக்கு மழை தொடரும்.

பாம்பன் மண்டபம் - 18 செ.மீ

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் - 17 செ.மீ

காரைக்கால், புதுக்கோட்டை, அறந்தாங்கி - 11 செ.மீ

சேலம் மோகனூர் - 10 செ.மீ

மகாபலிபுரம், பெருங்களூர், பெருஞ்சாணி - 9 செ.மீ,

தரங்கம்பாடி 8 செ.மீ

தஞ்சாவூர்- 7 செ.மீ

பவானிசாகர், பரமக்குடி, இளையான்குடி, திருமயம், பூந்தமல்லி திருவாடனை - 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.