Published:Updated:

மழைநீரில் தத்தளிக்கும் வீடுகள்; கவனப்படுத்திய விகடன்! - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட துரைமுருகன்

``பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். முதற்கட்டமாக, நிவாரண முகாம்களில் தங்கவைத்து அரிசி, துணி கொடுக்குமாறும் கூறியிருக்கிறேன். என்னுடைய கட்சிக்காரர்களையும் உதவிக்கு அனுப்பியுள்ளேன்’’ என்றார் அமைச்சர் துரைமுருகன்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட கிளிதான்பட்டரை, இந்திரா நகர் குடியிருப்புப் பகுதியை மழைநீர் முழுவதுமாகச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் பகுதியில், குடியாத்தம் செல்லும் சாலையோரம் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கூரை வீடு அமைத்து, கயிறு திரிக்கும் தொழிலைச் செய்துவருகிறார்கள். இந்தக் குடியிருப்புக்குப் பின்புறம் ஏரி இருக்கிறது. மழைக்காலங்களில் ஏரி நிரம்பினாலும், குடியிருப்புகளுக்குள் நீர் புகாது. அப்படியே புகுந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. நீரை வெளியேற்றவும் வழித்தடம் இருந்திருக்கிறது. காலப்போக்கில், நீர் வெளியேறும் வழித்தடத்தை வெளி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் இந்திரா நகர் மக்கள்.

வீட்டுக்குள் புகுந்த மழைநீர்
வீட்டுக்குள் புகுந்த மழைநீர்

``1986-ல், நெடுஞ்சாலை அமைப்பதற்காக இந்த மக்களின் நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டிருக்கின்றன. மாற்று இடம் கொடுப்பதாகக் கூறி அப்போதைய ஆட்சியாளர்கள், அவர்களை இந்திரா நகருக்கு அழைத்துவந்து தங்கவைத்திருக்கிறார்கள். ஆனால், மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால், இங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கிவிட்டனர். இது, இவர்கள் மீதான தவறில்லை; ஆட்சியாளர்கள் செய்த தவறு. இந்திரா நகர் குடியிருப்புகளைச் சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. எதிர்ப்புறம் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், டி.எஸ்.பி அலுவலகம் என அதிகார மையங்கள் இருந்தும், விளிம்புநிலை மக்களுக்கு விடியல் பிறக்கவில்லை’’ என்று கடுகடுக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

இறைச்சிக் கழிவுகளையும், குப்பைகளையும் வீடுகளுக்கு அருகிலேயே கொட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். `நீர்ப்பிடிப்பு இடம்’ என்று காரணம் காட்டி, இதுவரை அவர்களுக்குப் பட்டாவும் வழங்கப்படவில்லை. ஆனால், ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்கள். தரை வரி, கூரை வரி செலுத்துகிறார்கள். மின் இணைப்பையும் பெற்றுள்ளனர். அப்படியிருந்தும் நிரந்தரத் தீர்வுக்கு ஆட்சியாளர்கள் யாருமே முனைப்புக் காட்டவில்லை என்பதுதான் வேதனை. தற்சமயம், கொட்டித் தீர்க்கும் கனமழையால் இந்திரா நகர் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குடிசைகளில் வசித்த மக்கள் குழந்தைகளுடன் சாலையோரம் தங்கவேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

பாம்புகளும், விஷப் பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால் இவர்கள் அச்சமடைந்துள்ளனர். கொட்டும் மழையில், சாலையோரம் கிழிந்த தார்ப்பாயை கட்டித் தங்கியுள்ளனர். அதிலேயே சமைத்தும் சாப்பிடுகிறார்கள். இரவு நேரங்களில் அருகிலிருக்கும் அரசு அலுவலகங்கள், கோயில் வளாகங்களில் படுத்து உறங்குகிறார்கள். வீடுகளுக்குள் இருக்கும் பாத்திரங்களை எடுத்து எங்கே வைப்பது என்று தெரியாமல், அப்படியே விட்டுவிட்டிருக்கிறார்கள். மழைநீரில் சாக்கடைநீரும் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பாத்திரங்களையும் அதே தண்ணீரில் கழுவி சமைக்கப் பயன்படுத்துகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, மின்வாரிய அலுவலர்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் வீடுகளிலிருக்கும் மின் இணைப்பை முன்னெச்சரிக்கையாகத் துண்டித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சமூகச் செயற்பாட்டாளர் கோபி என்பவர் மூலம் இந்திரா நகர் மக்களின் பரிதாபநிலை குறித்து நமக்குத் தகவல் தெரியவந்தது. நேற்று மாலை, `விகடன் டீம்’ அங்கு விரைந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் துயரநிலையைப் பார்வையிட்ட பின் அமைச்சர் துரைமுருகனை போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, உடனடியாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் போனில் பேசி நடவடிக்கையை விரைவுப்படுத்தினார் துரைமுருகன்.

குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிகாரிகள்
குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிகாரிகள்

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, காட்பாடி தாசில்தார் ஜெகன் தலைமையிலான அலுவலர்கள் இந்திரா நகர் பகுதிக்கு நேற்று இரவு விரைந்துவந்தனர். மழைநீர் சூழ்ந்துள்ள வீடுகளில் வசித்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். உணவும், படுத்து உறங்குவதற்குப் பாயும் கொடுத்து பத்திரமாகத் தங்கவைத்திருக்கிறார்கள். நாம் உடனிருந்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த நேரத்தில், அமைச்சர் துரைமுருகனே போனில் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்.

நம்மிடம் அவர், ``என் தொகுதிப் பிரச்னையை கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி. மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். முதற்கட்டமாக, நிவாரண முகாம்களில் தங்கவைத்து அரிசி, துணி கொடுக்குமாறு கூறியிருக்கிறேன். என்னுடைய கட்சிக்காரர்களையும் உதவிக்கு அனுப்பியிருக்கிறேன். மாநிலம் முழுவதும் அணைகளைப் பார்வையிட்டு வருவதால், என் தொகுதிக்குத் தற்சமயம் வர முடியவில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு