Published:Updated:

நெல்லையில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி! - ஒரே நாளில் 9 அடி உயர்ந்த பாபநாசம் அணை நீர்மட்டம்

பழைய குற்றாலம் அருவி
பழைய குற்றாலம் அருவி

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம், ஒரே நாளில் ஒன்பதடி உயர்ந்தது.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழகத்தில் வெள்ளத்தால் சேதமேற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மழையால் சாலையில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர்
மழையால் சாலையில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர்

நெல்லை மாநகரில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கும் சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் குடிநீர்க் குழாய்களுக்காகத் தோண்டப்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளிக்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயப்பணிகள் தொடக்கம்
பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயப்பணிகள் தொடக்கம்

குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பிக் கடைகளை வாடகைக்கு எடுத்த வியாபாரிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பெய்யும் மழையின் காரணமாக மகிழ்ச்சியடைந்திருக்கும் விவசாயிகள் நாற்று நடவு செய்யும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இரண்டு நாள் மழைக்கே மிதக்கும் தூத்துக்குடி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்கிறது. பாபநாசம் அணைப் பகுதியில் நேற்று 13 செ.மீ மழை பதிவானது. 143 அடி கொள்ளளவுகொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்பதடி அதிகரித்து 111 அடியாக உயர்ந்தது. 156 அடி நீர்மட்டம்கொண்ட சேர்வலாறு அணை, ஒரே நாளில் 18.5 அடி அதிகரித்தது.

குறுக்குத்துறை முருகன் கோயில்
குறுக்குத்துறை முருகன் கோயில்

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றிலுள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு