Published:Updated:

`இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்!’ - ட்வீட் நீக்கப்பட்டதற்கு ரஜினி விளக்கம்

ரஜினி
ரஜினி

கொரோனா வைரஸ் தொடர்பாகப் பேசி ரஜினி வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நீக்கிவிட்டது. தற்போது, அதற்கான விளக்கம் அளித்துள்ளார் ரஜினி.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் வைரஸின் பாதிப்புகளைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று நாடு முழுவதும் ஜனதா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைகளுக்கு பாலிவுட் பிரபலங்கள் முதல் பலரும் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்துவருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் போன்ற பலரும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.

கொரோனா
கொரோனா

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த வீடியோவில், ``கொரோனா பாதிப்புகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது. அது மூன்றாவது கட்டத்திற்குப் போய்விடக்கூடாது. பொது இடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ், 12-14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே இந்த மூன்றாவது கட்டத்தை அடையாமல் தடுத்து நிறுத்திவிடலாம். இதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சுய ஊரடங்கு உத்தரவைக் கொடுத்துள்ளார். இதே போன்று இத்தாலியிலும் கொரோனா இரண்டாவது கட்டத்தில் இருக்கும்போதே அரசால் இப்படியான சுய ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோயுள்ளது. இதனால் இதை நாம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

`தவறான தகவல்.. தீவிரமாக கண்காணிக்கும் சமூக வலைதளங்கள்!' -ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர் #corona

ஆனால், ரஜினியின் பதிவு தங்களின் விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறி, அவரின் வீடியோவை ட்விட்டர் நீக்கிவிட்டது. இது, நேற்று முதல் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தன் வீடியோ நீக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினியே ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ``நேற்று பதிவு செய்த காணொளியில் 12-14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு, சூழல் மூன்றாவது நிலைக்குச் செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால் அது, ‘ இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்’ என்று பரவலாக புரிந்துகொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்று போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி, இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தைச் செலுத்துவோம். இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தை புரிந்துகொண்டு அதை ஆதரித்து மக்களிடம் என் பதிவைச் சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு