Published:Updated:

பஞ்சாப் செல்ல முடியாமல் தவித்த குத்துச்சண்டை வீராங்கனை; ஓடிவந்து உதவிய ரஜினி மன்றச் செயலாளர்!

தேவதர்ஷினியுடன் சோளிங்கர் ரவி
News
தேவதர்ஷினியுடன் சோளிங்கர் ரவி

பஞ்சாபில் தேசிய குத்துச்சண்டை போட்டிக்குத் தேர்வான வேலூர் மாணவி, பொருளாதாரச் சூழ்நிலையால் பயணச் செலவுக்குத் தவிப்புக்குள்ளான நிலையில், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார் ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி.

வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்தவர் கவிதா. இவரின் 18 வயது மகள் தேவதர்ஷினி, காட்பாடியிலிருக்கும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும் மகளிடம் சிறு வயதிலேயே காணப்பட்டதால், பெற்றோர் 14 வயதிலிருந்தே அவரை வாள் சண்டையில் பயிற்சிபெற வைத்தனர். வேலூரில் வாள் சண்டைக்கான ஸ்டேடியம் இல்லை. பயிற்சியாளரைத் தனியாக நியமித்து கற்றுக்கொடுக்கவும் வசதியில்லை என்பதால், வாரக் கடைசியில் அரக்கோணத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்தனர்.

தேவதர்ஷினி
தேவதர்ஷினி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, பயிற்சியைத் தொடர முடியாமல் போனது. மனம் தளராத தேவதர்ஷினி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குத்துச்சண்டை பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். பயிற்சிக்கான அகாடமியும் வேலூரிலேயே இருப்பது தேவதர்ஷினியை மேலும் ஊக்கப்படுத்தியது. பள்ளிகளுக்கு இடையேயும், மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்கேற்று தங்கம் வென்றார். மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு, வெற்றி வாய்ப்புக்கு அருகில் சென்றிருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம், கோயம்புத்தூரில் நடைபெற்ற தெற்கு மண்டலப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து, ஜார்கண்டில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் கால் இறுதி வரை முன்னேறினார். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், துபாயில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டிருப்பார். இந்த நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய கோப்பைக்கான போட்டி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில், காட்பாடியிலிருக்கும் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் தேவதர்ஷினி தேர்வாகியிருக்கிறார். ஆனால், வேலூரிலிருந்து பஞ்சாப் செல்வதற்கான பயணச் செலவு மற்றும் உணவு, அங்கு தங்குவதற்கான செலவுத் தொகை இல்லாமல் வாடினார். டிசம்பர் 14-ம் தேதி காலை அவர் புறப்படவிருந்த நிலையில், முதல் நாள் வரை ஸ்பான்ஸர் கிடைக்கவில்லை. கேட்ட இடத்திலும் உதவி கிடைக்கவில்லை.

தேவதர்ஷினியுடன் சோளிங்கர் ரவி
தேவதர்ஷினியுடன் சோளிங்கர் ரவி

தேவதர்ஷினியின் நிலை குறித்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றச் செயலாளர் சோளிங்கர் என்.ரவியிடம் நாம் தெரிவித்தோம். விகடனில் நாம் எழுதும் பல ஹியூமன் ஸ்டோரி கட்டுரைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தவர்; அதில் தொடர்ந்து பங்களிக்கக்கூடியவர் இவர். பயணத்துக்கு முதல் நாள் தேவதர்ஷினியைத் தேடிவந்து, பத்தாயிரம் ரூபாயை ரொக்கமாக கொடுத்து உதவினார். மேலும், பாதுகாப்பாகச் சென்று வெற்றியுடன் திரும்புமாறும் சோளிங்கர் ரவி வாழ்த்தினார். அவருக்கு தேவதர்ஷினியும், அவரின் அம்மாவும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர். டிசம்பர் 14-ம் தேதி காலை 7 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து, புன்னகை மலர்ந்த முகத்துடன் பஞ்சாப்புக்கு ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றார் வெற்றி வீராங்கனை தேவதர்ஷினி. நாளை நடக்கவிருக்கிறது போட்டி. நம்பிக்கையுடன் களத்தில் இருக்கிறார் தேவதர்ஷினி.

உதவி தேவைப்படுபவர்களும், உதவும் உள்ளங்களும் இணையும் புள்ளியில் நிகழ்கிறது அன்பும் அற்புதமும்.