Published:Updated:

`25ம் தேதி நேரில் ஆஜராகுங்கள்!' தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் ரஜினிக்கு சம்மன்

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் முன்பு வரும் 25-ம் தேதி ஆஜராக நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 2018-ம் ஆண்டு மே 22-ம் நாள் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்த ஆணையம், இதுவரை 18 கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது. இதுவரை, 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, 445 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்தவர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

`துப்பாக்கிச்சூடு குறித்த பேச்சு; தேவைப்பட்டால் ரஜினியையும் விசாரணைக்கு அழைப்போம்!'-விசாரணை ஆணையம்

அடுத்தடுத்த கட்ட விசாரணையில், அச்சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த அதிகாரிகள், போலீஸார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்த ஊழியர்கள், தடயவியல் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை ஆணையத்தின் முன்பாக வரும் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ரஜினி செய்தியாளர் சந்திப்பு
ரஜினி செய்தியாளர் சந்திப்பு

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ரஜினி நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் போலீஸ்தான்.

போராட்டத்தில் பங்குகொண்டு போலீஸாரையே தாக்கிய சமூக விரோதிகளை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும். ஒருநபர் விசாரணை ஆணையத்தில் நம்பிக்கையில்லை” எனக் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், ``போராட்டத்தில் பங்கெடுத்த மக்களை, எப்படி சமூக விரோதிகள் என நடிகர் ரஜினி கூறினார்” என அப்போதே பல அமைப்பினர்களும் கொந்தளித்தனர்.

நடிகர் ரஜினி
நடிகர் ரஜினி

இதுவரை ஆணையத்தின் முன்பாக விசாரணைக்காக ஆஜரானவர்களில் பெரும்பாலானவர்கள், நடிகர் ரஜினியை விசாரணைக்கு அழைக்க வேண்டும்” என மனு அளித்துள்ளனர். ``இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்குத் தேவைப்பட்டால் ரஜினியையும் விசாரணைக்கு அழைப்போம்” என ஆணையத்தின் தரப்பில் வழக்கறிஞர் வடிவேல் கடந்த 18வது கட்ட விசாரணையின் முடிவிலேயே கூறியிருந்தார். அதன் அடிப்படையில், நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு