தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. 25-வது கட்ட விசாரணை, கடந்த 22-ம் தேதி தொடங்கி இன்று (26-ம் தேதி) வரை நடைபெற்றது. தொடர்ந்து ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்த 25-வது கட்ட விசாரணையில் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதில், 26 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்களது வாக்குமூலங்களை பிரமாண பத்திரங்களாக அளித்திருக்கிறார்கள். இதுவரை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 943 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களில், 640 பேர் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இதுவரை 1,089 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னமும் ஒருநபர் கமிஷன் விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டியிருக்கிறது. அடுத்தகட்ட விசாரணையில் வருவாய்த்துறையினர், போராட்டத்தில் காயம்பட்ட காவலர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒருநபர் ஆணையத்தின் 26-வது கட்ட விசாரணை மார்ச் 15-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக ஏற்கெனவே சி.பி.ஐ., 27 பேர் மீது வழக்கு பதிந்துள்ள நிலையில், தற்போது கல் எரிந்ததாக 44 பேரைக் கூடுதலாக குற்றப்பத்திரிக்கையில் சேர்த்திருக்கிறது. இந்த 44 பேரிடமும் சம்மன் அனுப்பி விசாரணை செய்யவிருக்கிறோம். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்துக்கு அனுப்பிய சம்மனுக்கு அவரது வழக்கறிஞர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், `தன்னிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என தெரிவித்திருக்கிறோம்.

வேண்டுமென்றால் சென்னையிலுள்ள விசாரணை அலுவலகத்துக்கு வந்து விசாரணையில் ஆஜராகலாம் எனக் கூறியிருக்கிறேம். எனவே, ரஜினிகாந்திடம் நிச்சயம் நேரில் விசாரணை நடத்தப்படும். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னமும் 400-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அதைத் துரிதப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் இறுதியாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.