Published:Updated:

`அரசு முயல்கிறது; தப்பு சொல்ல முடியாது'- சுர்ஜித்துக்காக ரஜினிகாந்த் பிரார்த்தனை!

சுர்ஜித் உயிருடன், நலமுடன் மீண்டு வரவேண்டுமென ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள். 40 மணிநேரத்தையும் கடந்து மீட்பு பணி நடந்துவருகிறது. இந்தசம்பவம் நாடுமுழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. `இது போன்றதொரு நிலை இனி தொடரக்கூடாது’ என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். ``ஆழ்துளை கிணறுகளை மூட ஒரு நெறிமுறைகளை வகுக்கவேண்டும். முதலில் அறிவிப்பு, கண்காணிப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என எல்லாருமே சேர்ந்து உழைக்கவேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பெற்றொர்களும் கவனமாக இருக்கவேண்டும். இனிமேல் இப்படி நடக்க கூடாது'' என நேற்று லதா ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

`அரசு முயல்கிறது; தப்பு சொல்ல முடியாது'- சுர்ஜித்துக்காக ரஜினிகாந்த் பிரார்த்தனை!

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சுர்ஜித் உயிருடன், நலமுடன் மீண்டு வரவேண்டுமென ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கவனமுடன் இருக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குழந்தையை மீட்க அரசும், அதிகாரிகளும் முயற்சித்து வருகிறார்கள். அதனால் அவர்களை குறை கூறுவது தவறு" எனப் பேசினார்.

நடிகர் கமல்ஹாசன், ``ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.