Published:Updated:

`கடைசியாக ஒருமுறை தந்தையின் முகத்தைப் பார்க்கவிடுங்கள்!’ -வீடியோ கால் அனுமதி கேட்கும் முருகன்

முருகன்
முருகன்

தந்தையின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்க்க வீடியோ கால் அனுமதி வழங்க வேண்டும் என்று சிறையில் உள்ள முருகன், வழக்கறிஞர் மூலமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழக அரசும் விடுதலை செய்யும் முடிவில் உள்ளது.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

ஆனாலும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் ஏழு பேரின் விடுதலையும் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், முருகனின் தந்தை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வருகிறது. இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு `மிக அவசரம்’ என்று குறிப்பிட்டு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வெற்றிவேல் (75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நேரலாம் என்று மருத்துவர்களும் கூறிவிட்டனர்.

முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம்
முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம்

அப்படியிருக்கத் தந்தையின் முகத்தைக் கடைசியாக பார்க்க சிறையில் உள்ள முருகனுக்கு வீடியோ கால் அனுமதி வழங்க வேண்டும். மற்ற சிறைவாசிகள் கொரோனா தொற்று காரணமாக தங்களின் உறவினர்களுடன் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். எனவே, முருகனுக்கும் மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு