Published:Updated:

`உணவில் எதையோ கலக்கிறார்கள்!' -புழல் சிறைக்கு மாற்றக்கோரி முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் பாதுகாப்பு இல்லாததால் புழல் சிறைக்கு மாற்றக்கோரி, மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார், முருகன்.

முருகன்
முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதிகளான முருகனும் அவர் மனைவி நளினியும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 18-ம் தேதி, முருகனை அடைத்திருந்த அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆண்ட்ராய்டு செல்போன் கிடைத்ததாகச் சொல்லி முருகன்மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக, அக்டோபர் 31-ம் தேதி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

அப்போது செய்தியாளர்களிடம்,``சிறையில் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள்’’ என்று கதறிய முருகன், ``பல் துலக்க, குளிக்க, துணி துவைக்க என எதற்கும் அனுமதிப்பதில்லை. இலங்கையில் உள்ள என் தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ளது. சிகிச்சைக்காக அவர் தமிழகம் அழைத்துவரப்படுகிறார். அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக நளினியும் நானும் பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். 

அதைத் தடுக்கத்தான் சிறை அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இந்த நிலையில், திடீரென மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறார். இன்றுடன் நான்காவது நாளாக அவர் சாப்பாடு எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

முருகன்
முருகன்

இதுகுறித்து, முருகனின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். `` முருகனின் கண் மற்றும் பற்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவரின் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டரை மாதமாக பரோல் கேட்கிறார்.

அதற்குச் சிறை நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவருடைய ஆன்மிக வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் கடந்த சனி, ஞாயிறு அன்று கொடுத்த உணவில் எதையோ கலந்திருந்ததாகவும் முருகன் கூறுகிறார். தற்போது சிறைத் துறையினர் கொடுக்கும் உணவை அவர் எடுத்துக்கொள்வதில்லை.

இரண்டு பெண் அதிகாரிகளால் முருகன் உயிருக்கு ஆபத்து?

அதுமட்டுமல்ல, வேலூர் சிறையில் தனக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறும் சிறை அதிகாரிகளிடம் முருகன் மனு கொடுத்திருக்கிறார்’’ என்றார்.

இதுபற்றி, சிறைத்துறை தரப்பில் கேட்டபோது, ``முருகன் உண்ணாவிரதம் இருக்கவில்லை. தவிர, சிறை விதிகளை மீறி மற்ற விவரங்களை நாங்கள் வெளியில் கூறிக் கொண்டிருக்க முடியாது’’ என்கின்றனர்.