Published:Updated:

`விபரீதத்தைப் புரிந்துகொள்ளவில்லை; தலைமுடியிலும் வைரஸ் வாழும்!'-கொரோனா குறித்து மருத்துவர்கள் `ஷாக்'

வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு 2.09 லட்சம் பேர் வந்துள்ளனர். அவர்களில், 15 ஆயிரம் பேரின் வீடுகள் மட்டுமே கண்காணிக்கப்பட்டன. நேற்று இந்த எண்ணிக்கை 60 ஆயிரம் வீடுகளைத் தாண்டியுள்ளது.

"கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்தது. பிப்ரவரி மாதமே ரஷ்யா கொரோனா விஷயத்தில் உஷாராகிவிட்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமது நாட்டு எல்லைகளை மூடி மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மார்ச் முதல் வாரம் தெரிய ஆரம்பித்ததும்தான், நாள்தோறும் ஒவ்வொரு திட்டமாக மத்திய அரசு அறிவிக்க ஆரம்பித்தது. ஆனால் இன்று, எல்லை மீறி சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து, தமிழகத்திற்கு, 2.09 லட்சம் பேர் வந்துள்ளனர். அவர்களில், 15 ஆயிரம் பேரின் வீடுகள் மட்டுமே கண்காணிக்கப்பட்டன. நேற்று இந்த எண்ணிக்கை, 60 ஆயிரம் வீடுகளைத் தாண்டியுள்ளது. இவற்றில், 1.5 லட்சம் பேர் வசிக்கலாம் எனச் சொல்கிறார்கள். தற்போது வரை, 1,039 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 933 பேருக்குப் பாதிப்பு இல்லை என, உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் வரை, 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆய்வில் விஜயபாஸ்கர்
ஆய்வில் விஜயபாஸ்கர்

இந்நிலையில், துபாயிலிருந்து திருச்சி வந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். அதேபோல, லண்டனிலிருந்து சென்னை திரும்பிய சைதாப்பேட்டையைச் சேர்ந்த 65 வயது பெண்ணுக்கும், 24 வயது வாலிபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவில், சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் உறுதிசெய்தார். அதோடு, வெளிநாடுகளிலிருந்து வந்த பெரும்பாலானோர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு, எல்லாவித‌த்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதோடு, அதற்கான மருந்துகளும் மருத்துவர்களும் தயார் நிலையில் இருப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், கொரோனா பகுதியில் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம். ”கொரோனா வைரஸ் என்னும் அரக்கனை விரட்ட, அரசோடு மருத்துவர்களும், செவிலியர்களும் காவல்துறையும் இணைந்து, இரவு பகலாகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

இதன் வீரியம் புரியாமல் மக்கள் எல்லோரும் சர்வசாதாரணமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இது தவறான ஒன்று. அட்டைப் பெட்டி முதல் கடினமான இரும்பிலும்கூட ஏன் நம் தலை முடியிலும்கூட கொரோனா வைரஸ் தங்கிவாழும் தன்மையுடையதாக இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அரசு எவ்வளவு கடுமையான சட்டங்கள் போட்டாலும் எதையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது சரியா? உங்களுக்கு பாதித்தால், உங்கள் குடும்பத்திற்கே எதிரொலிக்கும். அதை யோசித்து செயல்படுங்கள்" என்கிறார்கள் ஆவேசமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு