Published:Updated:

`கேஸ் ஹிஸ்ட்ரியில் கோவிட்-19... ஆனால்?' - சென்னை தலைமை செவிலியர் மரணத்தில் நீடிக்கும் குழப்பம்

தலைமைச் செவிலியர் ஜோன் மேரியின் கேஸ் ஹிஸ்ட்ரி
தலைமைச் செவிலியர் ஜோன் மேரியின் கேஸ் ஹிஸ்ட்ரி

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்று டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார். ஆனால், கேஸ் ஹிஸ்ட்ரியில் கோவிட் 19-க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தலைமைச் செவிலியர் ஜோன் மேரி பிரசில்லா (58), ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். தலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், `தலைமைச் செவிலியர் கொரோனாவால் இறக்கவில்லை' என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி, விளக்கம் அளித்துள்ளார்.

ஜோன் மேரி பிரசில்லா
ஜோன் மேரி பிரசில்லா
`இன்னும் மூன்றே நாள்கள்தான் டுயூட்டி' - கொரோனாவால் சென்னை அரசு தலைமைச் செவிலியருக்கு நேர்ந்த துயரம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ``தலைமைச் செவிலியர் ஜோன் மேரி பிரசில்லா உயிரிழந்த சம்பவத்தில் எப்படி குழப்பம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. சுனாமி காலகட்டத்தில் சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் அவர் பணியாற்றினார். மேலும், நீண்டகாலமாக இந்த மருத்துவமனையில் அவர் பணியாற்றி வருவதால், தலைமைச் செவிலியரை மருத்துவமனையில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கொரோனாவால் அவர் உயிரிழக்கவில்லை என்று டீன் ஜெயந்தி தெரிவித்ததும் அவரின் சடலம், இறுதி அஞ்சலிக்காக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தலைமைச் செவிலியரின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க அங்கு நின்றுகொண்டிருந்தனர்.

தலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. கேஸ் ஹிஸ்ட்ரியில் தவறான தகவல்கள் குறிப்பிட்டிருக்கலாம். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது
டீன் ஜெயந்தி
ரிச்சர்ட்
ரிச்சர்ட்

தலைமைச் செவிலியரின் மகன் ரிச்சர்ட் கூறுகையில், ``என் அம்மாவை இப்படி பிணமாகப் பார்ப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. அம்மாவுக்கு 2 தடவை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோதும், அவருக்கு கொரோனா இல்லை என்றுதான் ரிப்போர்ட் வந்தது. ஆனால், கேஸ் ஹிஸ்ட்ரியில் கொரோனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரித்தால் சரியான பதில் இல்லை" என்றார் கண்ணீர்மல்க.

தலைமைச் செவிலியரின் சகோதரர் ஆண்ட்ரூஸ் கூறுகையில், ``என் சகோதரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து பேசியவர்கள், சகோதரி இறந்துவிட்டதாகக் கூறினர். அவருக்கு சிகிச்சை அளித்த கேஸ் ஹிஸ்ட்ரியில் கொரோனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கேஸ் ஹிஸ்ட்ரியை மருத்துவமனையில் பணியாற்றும் நல்ல மனிதர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்" என்றார்.

`இது, கொரோனா நோயாளி பயன்படுத்திய படுக்கை!' - பதறவைக்கும் புதுவை அரசு மருத்துவமனை; அதிர்ச்சி வீடியோ
ஆண்ட்ரூஸ்
ஆண்ட்ரூஸ்

இதுகுறித்து டீன் ஜெயந்தியிடம் கேட்டபோது, ``தலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. கேஸ் ஹிஸ்ட்ரியில் தவறான தகவல்கள் குறிப்பிட்டிருக்கலாம். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றார்.

தலைமைச் செவிலியரின் சடலம், கீழ்கட்டளையில் உள்ள சர்ச்சுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரின் மரணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு