Published:Updated:

நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!

நளினி

நளினியை அவரின் தாயாருடன் சமரசம் பேசி சேர்த்து வைத்ததில், முருகன் மீது பிரியம் கொண்டு, அவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் நளினி.

நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!

நளினியை அவரின் தாயாருடன் சமரசம் பேசி சேர்த்து வைத்ததில், முருகன் மீது பிரியம் கொண்டு, அவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் நளினி.

Published:Updated:
நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏறக்குறைய 30 ஆண்டு காலம் சிறையில் கழித்த நளினி, வேலூர் சிறையில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பெண் கைதி ஆவார்.

நளினி ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா ஒரு விடுதலைப் போராட்ட தியாகி. அன்றைய காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தவர். நளினியின் தாயார் பத்மாவதி ஒரு செவிலியர். தந்தை சப் இன்ஸ்பெக்டர். நளினி, பாக்யநாதன் என இரண்டு பிள்ளைகள். கருத்து வேறுபாட்டால், பத்மாவதி கணவரைப் பிரிந்து தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தார்.

நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!

செவிலியர் பணியில் போதுமான வருமானம் இருந்ததால் மூத்த பெண் நளினியை நன்றாக படிக்க வைத்தார். சென்னை கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த நளினி, நல்ல ஆங்கில அறிவும் கொண்டிருந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றில் ஸ்டெனோகிராபராக பணியாற்றி வந்தார். பணி செய்துகொண்டே தொலை தூர கல்வி மூலம் முதுகலைப் பட்டமும் படித்து வந்தார்.

பாக்யநாதன் சரிவர படிக்காததால் ஒரு பிரின்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு விவகாரத்தில் நளினி அம்மாவிடம் கோபித்துக்கொண்டு வில்லிவாக்கத்திலுள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். தம்பி பாக்யநாதன் மட்டும் அக்காவை வந்து அடிக்கடி பார்த்துச் செல்வார்.

பாக்யநாதன் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்தபோது அங்கு அடிக்கடி வரும் இலங்கைத் தமிழர்களின் சோகக் கதைகளை அடிக்கடி கேட்டு போராளிகளின் மேல் அனுதாபம் கொண்டவராய் இருந்தார். அந்த சமயத்தில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்தான் நளினியைத் திருமணம் செய்த முருகன். தாஸ் என்ற பெயரில் பாக்யநாதனுக்கு அறிமுகமான முருகனின் அண்ணன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர். 1987 ஆம் ஆண்டு நடந்த போரில் இறந்து போய்விடுகிறார். அதற்கு பின்னர் முருகனும் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த நிலையில், இயக்கத்தின் சார்பில் அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். தங்குமிடமின்றி தவித்ததால், பாக்யநாதன் அவரை அழைத்துக் கொண்டு வந்து தன்னுடைய வீட்டிலே தங்க வைத்தார்.

நாளடைவில் பாக்யநாதன் தாயார் பத்மாவதி மற்றும் சகோதரி நளினி ஆகியோருடன் நல்ல அறிமுகமாகி, அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறி விடுகிறார் முருகன். நளினியை அவரின் தாயாருடன் சமரசம் பேசி சேர்த்து வைத்ததில், முருகன் மீது பிரியம் கொண்டு, அவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் நளினி.

நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!

ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று நளினி, அவரின் கணவர் முருகனுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். அப்போது நளினி இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார். குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தி சிறையில் தான் கடுமையான சித்ரவதை மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், குடிக்க தண்ணீர் கூட தரப்படாமல் பல நாள்கள் பட்டினியாக இருந்ததாகவும், தனது வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் பிறக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்ததாகவும், பல ஆண்டுகள் கழித்து நளினி தனது வழக்கறிஞர் மூலம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சிறையிலேயே குழந்தையைப் பெற்று வளர்த்தார் நளினி. ஹரித்ரா எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தை, ஐந்து வயதிற்கு பின்னர் நளினியின் சக சிறைவாசி ஒருவர் கோவைக்கு அழைத்து வந்து அவரை வளர்த்துப் படிக்க வைத்தார். பிறகு முருகனின் தாயாருடன் இலங்கைக்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து இங்கிலாந்திற்கு சென்றார். இப்போது அவருக்கு 29 வயதாகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு நபர்களில் நளினி ஒருவர் மட்டுமே குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்தார். ராஜீவ் கொல்லப்பட்ட சில தினங்களில் நளினி, கொலை திட்டம் தீட்டியவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. கொலை நடைபெற்ற பிறகு நளினியும் முருகனும் சென்னையில் இருந்து சென்று பல்வேறு இடங்களில் மறைந்து வாழ்ந்தனர். ஒரு மாதம் கழித்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக முருகன், பல ஆண்டுகள் கழித்து தனது வழக்கறிஞர் மூலம் அளித்த பேட்டியில், "'சிவராசன் மாஸ்டரை ( ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் முதன்மையானவர். பெங்களூரில் தலைமறைவாக இருந்தபோது சிபிஐ சுற்றிவளைத்ததால் தற்கொலை செய்துகொண்டவர்) ஒருநாள் பார்க்கப் போனேன். 'இந்திய ராணுவத்தோடு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட முரண்பாட்டால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரை நாம் பகைத்துக்கொள்ளும்படி ஆனது. ஆகவே, நல்லெண்ணத்தை வளர்க்க அவர்கள் வரும்போது மாலை அணிவிக்க தமிழ்ப் பெண் ஒருவர் வேண்டும்’ என்றார். எனக்கு தமிழகத்தில் தெரிந்த ஒரே பெண் நளினி மட்டும்தான். எங்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சிவராசன் கேட்டார் என்று நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். எனக்கு அமைப்பால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலையும் மீறி, ஒரு மூத்த உறுப்பினரைச் சந்தித்து நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். நான் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு அதுதான்!

நளினி
நளினி

தனு, சுபா ( (ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள். இதில் தனுதான் மனிதவெடிகுண்டாக செயல்பட்டவர்) இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச்சென்றார் நளினி. எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அதைச் செய்தார் நளினி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

1999-ம் ஆண்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "கட்டளையை நிறைவேற்றும் அமைதியான பங்கேற்பாளராகவே நளினி இருந்தார். அவர் இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்று கூற ஆதாரங்கள் ஏதும் இல்லை. மிகவும் மோசமான சதித்திட்டத்திற்குள் சிக்கிக் கொண்டதால் நளினி போன்ற ஒரு பெண்ணால் துணிவாக பின் வாங்கி இருக்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

30 ஆண்டு கால சிறை வாழ்க்கையில், 2016 ஆம் ஆண்டில் நளினியின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவருக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக 2019 ஜூன் 25 அன்று 30 நாள்களுக்கு பரோலில் விடுவிக்கப்பட்டார். பின்பு பரோல் 51 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 15 அன்று மீண்டும் சிறைக்கு சென்றார். தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2021 முதல் பரோலில் இருந்தவர் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவால் விடுதலை ஆகியிருக்கிறார்.

நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!

கடந்த ஓராண்டாக பரோலில் வெளியே இருக்கும் நளினி, காட்பாடி பிரம்மபுரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்.

விடுதலை உத்தரவு நகல் இன்னும் சிறைத்துறைக்கு வராததால், அவரின் விடுதலை தாமதமாவதாக என தகவல் வெளியாகியிருக்கிறது. பரோல் நடைமுறைபடி, இன்று காலை காட்பாடி காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து கையெழுத்திட்டார் நளினி.