Published:Updated:

`மக்கள் பயப்பட வேண்டாம்!' - சென்னையில் வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் கூறும் ரமணன்

கோடை வெயில்
கோடை வெயில்

"சென்னை உட்பட பல பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் மேல் பதிவாகியது. 15 ஆண்டுகளுக்கும் முன்பு இதே மே மாதத்தில் சென்னையில் மிக அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது."

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நேற்று பலத்த சேதத்தை ஏற்படுத்திக் கரையைக் கடந்தது அம்பன் புயல். அந்தப் புயலின் தாக்கத்தால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேலும், அனல் காற்றும் அதிகம் வீசுகிறது. இதனால் நண்பகல் வேளையில் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்பநிலை மற்றும் அனல் காற்றின் தாக்கம் எப்போது குறையும்? இந்தக் கேள்வியுடன், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனிடம் பேசினோம்.
கோடை வெயில்
கோடை வெயில்

``அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்குப் பதியிலிருந்து காற்று வீசும். அப்போது வெப்பநிலை சராசரி அளவில்தான் இருக்கும். பிறகு பூமி சுழற்சியால் சூரியன் வடக்கு நோக்கி நகர்வதுபோல தோன்றி, சூரியனின் நேர் கிரகணங்கள் பூமியின் மீது விழும். அப்போது மேற்கில் இருந்து காற்று வீசினால், வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை பதிவாகும். அத்துடன் நிலக்காற்று அதிகம் வீசினால் அனல் காற்றும் அதிகமாக இருக்கும். இதனுடன் தற்போது அம்பன் புயல் பாதிப்பால், சென்னை உட்பட வட மாவட்டங்களில் நிலக்காற்றுடன் மேற்கில் இருந்தும் அதிகமாகக் காற்று வீசுகிறது. இதனால்தான் சில தினங்களாக வழக்கத்துக்கு மாறாக அதிக உஷ்ண நிலையை உணர்கிறோம்.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் காலை 10.30 மணிவாக்கில் கடல் காற்று வீசத் தொடங்கிவிட்டால் அன்று உயர்ந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் இருக்கும். கடல் காற்று வீசத் தாமதமாகும் நேரத்தைப் பொறுத்து உயர்ந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயரும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அம்பன் புயல் அட்சரேகையைக் கடந்து வடக்குநோக்கிச் செல்லும்போது நம் பகுதியில் கடல் காற்றே சரியாக வீசவில்லை. அதன் தாக்கத்தால் தற்போதும் கடல் காற்று சரியாக இல்லாமல் தாமதமாகவே வீசுகிறது.

ரமணன்
ரமணன்

அதனால்தான் சில தினங்களாகத் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் மேல் பதிவாகிறது. 15 ஆண்டுகளுக்கும் முன்பு இதே மே மாதத்தில் சென்னையில் மிக அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. சில தினங்களாக வெப்பநிலை சற்றே அதிகமாகப் பதிவானாலும், இது கோடைக்காலத்தின் சராசரியான வெப்பநிலைதான். அதனால் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேசமயம் கேரளாவில் அதிக மரங்கள் இருப்பதால், அங்கு வெப்பநிலை கட்டுக்குள்தான் இருக்கிறது. சென்னையிலேயே மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகம் மரங்கள் சூழ்ந்த கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை சற்றே குறைவாகவே இருக்கும்.

வனங்கள், மரங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாதல் அதிகரித்துவரும் வேளையில், ஆண்டுதோறும் வெப்பநிலை உயர்ந்துகொண்டே வருகிறது. இயற்கையை அதிகளவில் கட்டமைப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. வீட்டுச் சுவர்களுக்கு வெள்ளைச் சுண்ணாம்பு பூசுவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்க்கலாம்.

கோடை வெயில்
கோடை வெயில்

தற்போது வெள்ளை நிற ஆடைகள் மற்றும் கதர் ஆடைகளை அணிவது நல்லது. முடிந்தவரை நண்பகல் வேளையில் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக்கொள்ளலாம். குளிர்ச்சியான உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம். இதனால் தற்போதைய கோடை வெப்பத்திலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். அதிக வெப்பநிலை நிலவும் சூழலில், வெப்பச்சலனம் உருவானால் மட்டுமே கோடை மழையை எதிர்பார்க்க முடியும்” என்று கூறினார் ரமணன்.

அடுத்த கட்டுரைக்கு