Published:Updated:

ராமநாதபுரம்: `மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலை!’ - கைகொடுத்த மாவட்ட காவல்துறை

ராமநாதபுரம்
ராமநாதபுரம்

ஆதரவு கொடுக்க யாருமின்றி சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உடை, உணவு வழங்கி மறுவாழ்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ஏர்வாடி, திருப்புல்லாணி, தேவிபட்டினம், உத்தரகோசமங்கை உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் உள்ளன. இங்கு நாள்தோறும் வந்து செல்லும் யாத்திரைவாசிகளின் எண்ணிக்கையைப் போன்றே ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்டுச் செல்லும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம். என்ன செய்கிறோம், எதை உண்கிறோம், எங்கு உறங்குகிறோம் என எதுவுமே தெரியாத நிலையில் கால்போன நோக்கில் அலைந்து திரியும் இவர்கள் கொரோனா ஊரடங்கினால் உணவின்றி பாதிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மனநலம் பாதிக்கபட்டவர்கள் பராமரிப்பு
மனநலம் பாதிக்கபட்டவர்கள் பராமரிப்பு

இதனால், கடந்த சில நாள்களாக இவர்களைப் போன்றவர்கள் பட்டினியில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையும் ஏற்பட்டது. இந்த அவல நிலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணிற்கு தகவல்கள் வரப்பெற்றன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில், பராமரித்து பாதுகாக்க வழியின்றி சுற்றிதிரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கல் 52 பேரை மீட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார், சவரத் தொழிலாளர்களின் உதவியுடன் அவர்களுக்கு முடிதிருத்தம் செய்தனர். பின்னர் சுகாதாரமற்ற நிலையில் இருந்த அவர்களைக் குளிக்க வைத்து, அவர்கள் அணிந்திருந்த அழுக்கு உடைகளுக்கு மாற்றாக நல்ல உடைகளை அணிவித்தனர். இதன்பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதுடன், போர்வைகளும் வழங்கப்பட்டன.

மனநலம் பாதிக்கபட்டவர்கள் பராமரிப்பு
மனநலம் பாதிக்கபட்டவர்கள் பராமரிப்பு

மாவட்ட காவல்துறையினரின் இந்த மனிதாபிமான முயற்சியினால் பொதுவெளியில் அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், இன்னல்கள் சந்திக்கும் நிலையிலும் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து இவர்களின் நிலைகுறித்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த மனிதாபிமான முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு