Published:Updated:

திடீர் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்! - தக்க நேரத்தில் உதவிய ராமநாதபுரம் காவலர்கள் #Lockdown

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ( உ.பாண்டி )

இதையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய எஸ்.ஐ தங்கமுனியசாமியைத் தொடர்புகொண்ட வசந்தகுமார், கர்ப்பிணிப் பெண் தனது வீட்டிற்குச் செல்ல வாகன ஏற்பாடு செய்து உதவ கேட்டுள்ளார்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள ரெகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ ஓட்டுநரை அழைத்துள்ளனர். அந்த ஆட்டோ ஓட்டுநரோ, ஊரடங்கு நேரம் என்பதால் ஆட்டோவில் செல்ல முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர்.

போலீஸ் எஸ்.ஐ வசந்தகுமார்
போலீஸ் எஸ்.ஐ வசந்தகுமார்
உ.பாண்டி

இதைக் கண்டு மனம் இளகிய ஆட்டோ டிரைவர், திருப்புல்லாணி காவல் நிலைய எஸ்.ஐ வசந்தகுமாரிடம் பேசி அனுமதி வாங்கினால் ஆட்டோவில் செல்லலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து எஸ்.ஐ வசந்தகுமாரை தொடர்புகொண்ட அப்பெண்ணின் உறவினர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் நிலை குறித்து கூறியுள்ளனர். இதையடுத்து ஆட்டோவில் செல்ல எஸ்.ஐ அனுமதி அளித்தார்.

உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஆட்டோ அங்கிருந்து திரும்பிச் சென்றது. இந்நிலையில் பிரசவ வார்டுக்குச் சென்ற அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், உடல் சூட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள வலி இது. பிரசவ வலி அல்ல. பிரசவத்துக்கு இன்னும் நாள்கள் உள்ளன எனக் கூறி அப்பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

எஸ்.ஐ தங்கமுனியசாமி
எஸ்.ஐ தங்கமுனியசாமி
உ.பாண்டி

ஆனால், வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வாகன வசதி ஏதும் இல்லாத நிலையில் மீண்டும் எஸ்.ஐ வசந்தகுமாரை தொடர்புகொண்டு மருத்துவர்கள் கூறியதையும் கர்ப்பிணிப் பெண்ணை மீண்டும் ரெகுநாதபுரத்துக்கு அழைத்து வர உதவும்படியு கேட்டுள்ளனர். இதையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய எஸ்.ஐ தங்கமுனியசாமியைத் தொடர்புகொண்ட வசந்தகுமார், கர்ப்பிணிப் பெண் தனது வீட்டிற்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து உதவ கேட்டுள்ளார்.

உடனடியாகச் செயல்பட்ட தங்கமுனியசாமி, தனது காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் முத்துக்குமார் என்பவரை அழைத்து, ரெகுநாதபுரத்துக்கு கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் செல்ல ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்ய கூறியுள்ளார். சிறிது நேர முயற்சிக்குப் பின் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அழைத்து வந்த காவலர் முத்துக்குமார், அந்தப் பெண்ணை ரெகுநாதபுரத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் ரெகுநாதபுரத்துக்குச் செல்லும் வழியிலோ, திரும்பும் வழியிலோ இடையூறு ஏதும் ஏற்பட்டால் உடனடியாகத் தன்னை தொடர்புகொள்ளுமாறு கூறிய காவலர் முத்துக்குமார், தனது செல் போன் எண்ணையும் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்தனுப்பினர். இதையடுத்து ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட அந்தக் கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக அவரது வீட்டில் சேர்க்கப்பட்டார். தாங்கள் வீடு திரும்பிய விவரத்தை அந்தப் பெண்ணின் உறவினர்கள் எஸ்.ஐ-க்கள் மற்றும் காவலர் முத்துக்குமார் ஆகியோருக்கு தெரியபடுத்தியதுடன், இக்கட்டான நேரத்தில் உதவியதற்கு நன்றி தெரிவித்தும் நெகிழ்ந்தனர்.

காவலர் முத்துக்குமார்
காவலர் முத்துக்குமார்
உ.பாண்டி

மருத்துவ காரணங்களுக்காகக்கூட சில பகுதிகளில் போளீஸார் வாகனங்களை அனுமதிக்காதது சர்ச்சையானது. இதற்கு மாற்றாகக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவமனை வந்து செல்ல வாகன ஏற்பாடு செய்து கொடுத்த ராமநாதபுரம் காவல் துறையினரின் மனிதாபிமான சம்பவம் பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு