Published:Updated:

`19 ஊர்; கொரோனா உயிரிழப்பே இல்லாம காப்பாத்தினாங்க!' - செவிலியருக்கு பாராட்டு விழா எடுத்த மக்கள்

``மற்ற ஊர்கள்ல எல்லாம் கொரோனாவால மரணம் ஏற்பட்டப்போ, நர்ஸ் கவிதாவோட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சேவையால, திருவெற்றியூர் ஊராட்சியைச் சுற்றியுள்ள 19 கிராமங்கள்லயும் உயிரிழப்பு இல்லாம காப்பாற்ற முடிஞ்சது.'' - ஊர் மக்கள்

கொரோனோ பேரிடர் தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில், தங்களுக்கு அர்ப்பணிப்போடு சேவை செய்த செவிலியருக்கு கிராம மக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே திருவெற்றியூர் ஊராட்சியை உள்ளடக்கி 19 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அமைந்துள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம செவிலியராகப் பணியாற்றி வருபவர் கவிதா.

செவிலியர் கவிதா
செவிலியர் கவிதா

கொரோனோ முதல் அலையின்போது அதுபற்றி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்ட நிலையிலும், கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த அபாயகரமான சூழலிலும் கிராம செவிலியர் கவிதா, தன்னைப் பற்றி கவலைப்படாமல் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

அதை அங்கீகரிக்கும் வகையில், இப்போது ஊர் மக்கள் திரண்டு வந்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய கிராம மக்கள், ``கொரோனாவுக்கு பயந்து யாருமே வெளியே போக பயந்த நிலையில, நர்ஸ் கவிதாதான் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் போயி கபசுர குடிநீர் கொடுக்குறது, மாத்திரைகள், மருந்துகள் கொடுப்பது, எங்களுக்கு விழிப்புணர்வு, நம்பிக்கை, ஆறுதல் சொல்றதுனு சுற்றிச் சுழன்றாங்க. அது மட்டுமில்லாம, நோயை அண்ட விடாம வீடுகள்ல சுகாதாரமா இருப்பது பத்தியும் அறிவுரை சொல்வாங்க.

மற்ற ஊர்கள்ல கொரோனாவால மரணம் ஏற்பட்டப்போ, நர்ஸ் கவிதாவோட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சேவையால, திருவெற்றியூர் ஊராட்சியைச் சுற்றியுள்ள 19 கிராமங்கள்லயும் உயிரிழப்பு இல்லாம காப்பாற்ற முடிஞ்சது. கொரோனா தீவிரம் குறைஞ்சதுக்கு அப்புறமும், எங்க மக்களுக்கு தடுப்பூசி போடுறதுல அக்கறை காட்டினாங்க கவிதா. அவங்க வீட்டுக்குப் போறதைவிட, எங்க கிராமங்கள்ல அவங்க சுற்றி வர்றதுதான் அதிகம்.

தன் வேலையை ஒரு சேவையா செஞ்சு எங்க பாதுகாப்பை எல்லாம் உறுதிப்படுத்த உழைச்ச கவிதாவுக்குப் பாராட்டு விழா நடத்தணும்னு, மக்கள் எல்லாரும் சேர்ந்து முடிவு செஞ்சோம். இதுக்கு கவிதா முதல்ல சம்மதிக்கல. நாங்க விடாப்பிடியாக விழாவை நடத்தி அவரை கௌரவிச்சுட்டோம். அதிகமா கூட்டம் கூடக் கூடாது என்பதால் இன்னும் சில கிராம மக்களால விழாவுல கலந்துக்க முடியல'' என்று நெகிழ்கிறார்கள் ஊர்மக்கள்.

செவிலியர் கவிதா
செவிலியர் கவிதா
Covid Questions: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள்; நிஜமா, பிரமையா?

கிராம செவிலியர் கவிதாவிடம் பேசினோம். ``என்ன சொல்றதுனே தெரியல. இந்தப் பகுதி மக்கள் என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கிறதை பார்க்கும்போது, உயிர் உள்ளவரைக்கும் இவங்களுக்கு சேவை செய்யணும்னு எண்ணம் வருது.

பக்கத்துல உள்ள கள்ளிக்குடிதான் என் சொந்த ஊர். சின்ன வயசுலருந்து பல கஷ்டங்களை அனுபவிச்ச வளர்ந்ததால, கிராம மக்களோட பிரச்னைகள் தெரியும். பத்து வருஷம் அங்கன்வாடியில வேலை செஞ்சு, இந்தப் பணிக்கு வந்தேன். திருவெற்றியூர் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கீழ 19 கிராமங்கள் இருக்கு, 13,000 மக்கள் வாழுறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சின்ன வயசுலருந்தே இயல்பா எல்லார்கிட்டயும் பழகி வந்ததால, அண்ணா, அக்கா, தாத்தானு உறவுமுறை சொல்லித்தான் மக்கள்கிட்ட பேசுவேன். அதனால எல்லாருக்கும் என்னையப் பிடிக்கும். அவங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வேன். அப்படித்தான் கொரோனா காலத்துல வேலை செஞ்சேன். என் குடும்பத்தை மறந்து, இந்தப் பகுதி மக்களுக்கு கொரோனா பாதிப்பு வந்துடக் கூடாதுன்னு வேலை செஞ்சேன்'' என்றவர்,

``எங்க துறையில பல பிரச்னைகள் இருந்தாலும் அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாம பணி செஞ்சுட்டு வர்றேன். பல மாசத்துக்கு முன்னாடியே, எனக்கு விழா நடத்தணும்னு மக்கள் கேட்டாங்க. அதெல்லாம் தப்புன்னு மறுத்துட்டேன். ஆனா, இந்த முறை வற்புறுத்தி நடத்திட்டாங்க. அதிகாரிங்களோ, பெரிய ஆளுங்களோ பாராட்டுறதைவிட நாம வேலை செய்ற ஊர் மக்களே நம்மளப் பாராட்டுறது யாருக்குக் கிடைக்கும்?! அதைவிட ஒரு அங்கீகாரம் என்ன வேணும்?! ரொம்ப சந்தோசமா இருக்கு.

செவிலியர் கவிதா
செவிலியர் கவிதா
Covid Questions: டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி டம்ளர்களால் கொரோனா பரவுமா?

இந்த மக்களுக்கு இன்னும் காலம் முழுக்க உழைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்" என்றார் உணர்வுப் பெருக்குடன்.

திருவெற்றியூரில் துணை சுகாதார நிலையத்துக்குச் சொந்தக் கட்டடம் இல்லாமல், கவிதா தன் சொந்த செலவில் வாடகை கட்டடத்தில் இருந்து இயங்கி வருகிறார். முன்களப்பணியாளர்களை அங்கீகரிப்பதில் கூட அரசும், தனியார் அமைப்புகளும் சில நேரங்களில் பாரபட்சம் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. சிறப்பாக வேலை செய்தவர்கள் பலரை மாவட்ட நிர்வாகத்தினர் உதாசீனப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், ஒட்டுமொத்த கிராம மக்களும் சேர்ந்து ஒரு கிராம செவிலியருக்கு பாராட்டு விழா நடத்தி `மக்கள் சேவகி கவிதா' என்ற விருதை வழங்கி விழா எடுத்து கௌரவப்படுத்தியுள்ளது, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

வேலையில் அன்பும் அர்ப்பணிப்பும் இணையும்போது அப்படித்தான் அற்புதங்கள் உருவாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு