ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.
கடந்த சில தினங்களாக மண்டபம் கடல் பகுதியில் வழக்கத்தைவிடக் காற்றின் வேகம் அதிகரித்து, கடல் சீற்றத்துடன் காணப்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வங்கக்கடலில் அந்தமான் அருகே புயல் சின்னம் உருவானதால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
அதன்படி நேற்றிரவு கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டுள்ளது. இதனால் மண்டபம் தெற்குத் துறைமுகப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் கடல் சீற்றத்தின் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. இதில் குஞ்சாரவலசை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது.

தற்போது கடலில் மூழ்கியுள்ள படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு விசைப்படகு வாங்குவதற்கு 50 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்பதால், மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மீனவர்கள், ``இது போன்று தொடர்ச்சியாகக் கடல் சீற்றத்தால் விசைப்படகுகள் சேதமடைவது வாடிக்கையாக இருந்துவருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாகத் தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளைப் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறோம். ஆனால், அவர்கள் எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் இருந்துவருவது வேதனையாக இருக்கிறது" என்றனர்.
