Published:Updated:

`ஒரு வருஷமாச்சு... எந்த உதவியும் கிடைக்கல!' - கலங்கும் மாற்றுத்திறனாளி குழந்தையின் தாத்தா

குறைபாடுகளுடன் பிறந்த தங்கள் முதல் குழந்தையை எப்படியாவது சிகிச்சை அளித்து நலமுடன் வாழ வைக்க வேண்டும் என நினைத்து தொடர்ந்து அக்குழந்தைக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து வந்தனர். ஆனாலும் குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அரசு உதவி கோரி மனு
அரசு உதவி கோரி மனு

ராமநாதபுரம் அருகே குறைபாடுகளுடன் உயிர் வாழ்ந்து வரும் 4 வயது குழந்தைக்கு கடந்த ஓர் ஆண்டாக பராமரிப்பு உதவி தொகை வழங்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த குழந்தைக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளி குழந்தை
மாற்றுத்திறனாளி குழந்தை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நயினார் கோயில் அருகே உள்ளது வாணியவல்லம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ராஜா - சரண்யா தம்பதியினருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறக்கும்போதே பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்த நிலையில், `குழந்தை நீண்டநாள்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை' என மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்துபோயினர் ராஜாவும், சரண்யாவும். ஆனாலும் குறைபாடுகளுடன் பிறந்த தங்கள் முதல் குழந்தையை எப்படியாவது சிகிச்சை அளித்து நலமுடன் வாழ வைக்க வேண்டும் என நினைத்து தொடர்ந்து அக்குழந்தைக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து வந்தனர். ஆனாலும், குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மாற்றுத்திறனாளி சான்று அட்டை
மாற்றுத்திறனாளி சான்று அட்டை

மருத்துவர், குழந்தைக்கு மனநல குறைபாடு, வளர்ச்சி குறைபாடு மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட 60% பாதிப்பு உள்ளதாக சான்று அளித்தார். இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளைப் பெற அந்த குழந்தையின் பெற்றோர் மாவட்ட அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு இறுதியில் பதிவு செய்தனர்.

மாற்றுத் திறனாளி என சான்றளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தக் குழந்தைக்கு உதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எல்லாம் ஏதாவது காரணம் சொல்லியபடி இருந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் தாத்தா போஸ் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம்பேசிய போஸ், ``என் மகள் சரண்யாவுக்கு முதல் குழந்தை பிறந்த போதே குறைபாடுகளுடன் பிறந்தது. பிரசவம் பார்த்த மருத்துவர்களும், `இந்த குழந்தை நீண்ட நாள் உயிர் வாழ்வது சிரமம்' என்றனர். ஆனாலும் பெற்ற குழந்தையை கைவிட்டுவிட என் மகளுக்கு மனசு வரவில்லை. இதனால், பல்வேறு சிரமங்களுக்கு இடையே என் பேத்தியை கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். 4 வயதான நிலையில் எந்த ஒரு செயலையும் அவளால் சுயமாக செய்ய முடியாது. அவளுக்குத் தேவையான அத்தனை பணிகளையும் அருகிலேயே இருந்து நாங்கள்தான் செய்து வருகிறோம். அந்த குழந்தையை தனியாக விட்டு விட்டு வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கு உதவியினை பெற பதிவு செய்தோம். பதிவு செய்து ஓர் ஆண்டு ஆன நிலையிலும் உதவி எதுவும் கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் வந்துவிடும், வந்துவிடும் என சொல்கிறார்கள். எனவேதான் கலெக்டரிடம் மனு கொடுக்க குழந்தையுடன் வந்துள்ளேன் '' என்றார்.

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை

பாதிக்கப்பட்ட குழந்தையின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அது தொடர்பான கோரிக்கை மனுவை போஸிடம் இருந்து பெற்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பாதிப்படைந்த குழந்தையின் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய உதவி தொகையினை வழங்க உத்தரவிட்டார்.