Published:Updated:

`சவுடு மண்ணில் 8 கி.மீ நீள பாலம்!' - உப்பூர் அனல்மின் நிலைய பணிகளால் கொதித்த மீனவர்கள்

உப்பூர் அனல் மின்நிலையம்
உப்பூர் அனல் மின்நிலையம்

உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனத்தினர், நீதிமன்ற உத்தரவை மீறி மோர்ப்பண்ணை பகுதியிலிருந்து எடுக்கப்படும் சவுடு மண்ணை கடலில் கொட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உப்பூர் அனல் மின்நிலையப் பணிகளுக்காக, நீதிமன்ற உத்தரவை மீறி, மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்ட லாரிகளை மோர்ப்பண்ணை கிராம மீனவர்கள் சிறைப்பிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் எதிர்க்கும் பாலம்
மீனவர்கள் எதிர்க்கும் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்த அனல் மின்நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியை எடுத்து வரவும், மின்நிலையத்திற்குத் தேவையான கடல் நீரை எடுத்து வரவும், பின்னர் பயன்படுத்திய நீரை கடலில் விடவும் சுமார் 8 கி.மீ தூரத்துக்கு கடலின் நடுவே பாலம் அமைக்கப்படுகிறது. கடல் மீது அமைக்கப்படும் பாலத்தை தூண்கள் அமைத்துக் கட்டாமல், கடலில் சவுடு மண்ணைக் கொட்டி பாலம் அமைத்து வருகின்றனர்.

இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதிகளில் உள்ள மோர்ப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், சவுடு மண்ணை கடலில் கொட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தங்களுக்கு பாதிப்பை உருவாக்கும் உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி, கடந்த ஜனவரி 26ல் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதனிடையே, உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனத்தினர், நீதிமன்ற உத்தரவை மீறி, மோர்ப்பண்ணை பகுதியிலிருந்து எடுக்கப்படும் சவுடு மண்ணை கடலில் கொட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தடுக்கக் கோரி, மோர்ப்பண்ணை கிராம மக்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

லாரிகள் சிறைபிடிப்பு
லாரிகள் சிறைபிடிப்பு

அதன் பின்னரும், இன்று காலை முதல் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான டிப்பர் லாரிகளில் கடலில் கொட்டுவதற்காக மணல் எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மோர்ப்பண்ணை கிராம மக்கள், மணல் ஏற்றிவந்த லாரிகளை சிறைப்பிடித்தனர். மேலும், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

அடுத்த கட்டுரைக்கு