Published:Updated:

`இதுதான் என்னைக் கடிச்ச பாம்பு!' - மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமநாதபுரம் தொழிலாளி

பாம்புடன் வந்த சேது
பாம்புடன் வந்த சேது ( உ.பாண்டி )

தொண்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சேது, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெறச் சென்ற சேது, தன்னைக் கடித்த பாம்பை எடுத்துச்சென்றார்.

ராமநாதபுரம் அருகே உள்ள தொண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, சிகிச்சை பெறுவதற்காக தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர், சேது. கூலித் தொழிலாளியான இவரது வீட்டின் முன் எலியை விழுங்கிய நிலையில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று மயங்கிக் கிடந்துள்ளது. அதைக் கண்ட சேது, அந்த பாம்பை கையால் பிடித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அந்நேரத்தில், சுருண்டு கிடந்த கட்டுவிரியன், திடீரென சேதுவின் கையில் சுற்றிக்கொள்ள, அதைக் கையிலிருந்து விடுவிக்க சேது முயன்ற போது, பாம்பு சேதுவைக் கடித்துள்ளது. வலியால் துடித்த சேதுவின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர்.

`இரண்டே நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது!'- பாம்பு களேபரத்தில் இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி

பாம்பின் பிடியில் சிக்கியிருந்த சேதுவை மீட்ட அவர்கள், அந்தப் பாம்பை தாக்கியதில் பாம்பு உயிரிழந்தது. இதையடுத்து, தொண்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சேது, மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெறச் சென்ற சேது, தன்னைக் கடித்த பாம்பையும் கையுடன் எடுத்துச்சென்றுள்ளார்.

பாம்புடன் வந்த சேது
பாம்புடன் வந்த சேது

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் பாம்பு கடித்த விவரத்தை சேது கூற, மருத்துவர்கள் என்ன பாம்பு கடித்தது எனக் கேட்டுள்ளனர். உடனே, தான் வைத்திருந்த பையிலிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். சேது கொண்டு வந்த பாம்புக்கு உயிர் இல்லை என்று தெரிந்த பின்னரே, அவர்கள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து, சேதுவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், `பாம்பு கடிக்கு நல்ல மருந்துகள் உள்ளன. பாம்பு கடிக்கு உள்ளானவரை உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்துவருவதுடன், கடித்தது என்ன பாம்பு எனத் தெரிவித்தாலே போதும். அதற்காக கடித்த பாம்பையே உடன் எடுத்து வர தேவையில்லை' என சேதுவுக்கு அறிவுரை கூறி மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு