ராமநாதபுரம்: `ஆன்லைன் கேமில் ரூ.90,000 பறிகொடுத்த சிறுவன்!’ - பெற்றோர் அதிர்ச்சி

கேம் அப்டேட் கேட்கும் சமயங்களில் அச்சிறுவன் தனது தாயின் ஏ.டி.எம் கார்டு, யுபிஐ நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டிருக்கிறான். இதன் மூலம் வங்கியிலிருந்து வந்த ஒ.டி.பி எண்களைப் பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறான்.
ஆன்லைம் கேம் மோகத்தில் சிக்கிய 7-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் கொடுக்கப்பட்ட செல்போன் மூலம், அவனுடைய பெற்றோர் 90,000 ரூபாயை இழந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மகன் கடலாடியிலுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பொழுதுபோக்குக்காக செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட அந்தச் சிறுவனுக்கு `ஃப்ரீ பயர்’ என்ற விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கேம் அப்டேட் கேட்கும் சமயங்களில் அந்தச் சிறுவன் தனது தாயின் ஏ.டி.எம் கார்டு, யுபிஐ நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டிருக்கிறான். இதன் மூலம் வங்கியிலிருந்து வந்த ஒ.டி.பி எண்களைப் பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறான். இதனால், சிறுவனின் தாயின் பெயரிலிருந்த வங்கிக் கணக்கிலிருந்து 90,000 ரூபாய் பறிபோயிருக்கிறது. மேலும் வங்கியிலிருந்து வந்த ஓ.டி.பி தகவல்களையும் அழித்திருக்கிறான் அந்தச் சிறுவன்.
இந்த நிலையில் தனது மனைவியின் கணக்கிலிருந்த பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றிருக்கிறார் செந்தில்குமார். அங்கு பணம் எடுக்க முயன்ற செந்தில்குமாருக்கு வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனத் தகவல் வர, அதிர்ச்சியடைந்தார்.

வீட்டுக்கு வந்த அவர், மகனிடமும் மனைவியிடமும் வங்கியில் பணம் இல்லாதது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது, தான் ஆன்லைன் கேம் விளையாடியதையும், அதனால் பணம் பறிபோனதையும் தந்தையிடம் கூறியிருக்கிறான் சிறுவன். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பணத்தை பறிகொடுத்ததற்கு தண்டனையாக அவனை ஒன்று முதல் 90,000 வரை நோட்டில் எழுதுமாறு கூறியிருக்கிறார்கள். இந்த நூதன தண்டனையின்படி 3,000-த்துக்கு மேல் அச்சிறுவனால் எழுத முடியவில்லை. இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு புத்திமதி கூறிய பெற்றோர், இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர்.