Published:Updated:

`லஞ்சம் கொடுக்க முடியல; 6 மாதம் வட்டாட்சியராக நியமியுங்கள்!' -ஆட்சியரை அதிரவைத்த இளைஞர்

வினோகர்
வினோகர் ( உ.பாண்டி )

அது, லஞ்சம் எனத் தெரியாமலே கொடுக்கும் நிலை உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, திருவாடானை தாலுகாவில் நிலவும் லஞ்சத்தை கட்டுப்படுத்த, திருவாடானை வட்டாட்சியராக என்னை 6 மாத காலம் நியமிக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசு அலுவலகங்ளில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்க, தன்னை வட்டாட்சியராக நியமிக்க வேண்டும் எனக் கேட்டு, இளைஞர் ஒருவர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பங்கேற்கும் குறைதீர் கூட்டங்களில் பங்கேற்கும் ஒரு சிலர், விநோதமான கோரிக்கைகளுடன் மனு கொடுத்துவருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற கமுதி விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாசி என்ற முதியவர், தனக்கு 16 வயது என சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு கொடுத்து திகைக்க வைத்தார். இதே நபர், கடந்த திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தபோது, உலக பாட்மின்டன் சாம்பியன் பட்டம் பெற்ற பி.வி.சிந்துவை தான் திருமணம் செய்துகொள்ள மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் எனக் கோரி மனு கொடுத்து, குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றவர்களைத் திகைக்கவைத்தார். இந்தப் பரபரப்பு ஓய்வதற்கு முன் அடுத்த கட்டமாக, 'மாவட்டத்தில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்க தன்னை வட்டாட்சியராக நியமிக்க வேண்டும்' என வாலிபர் ஒருவர் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள மங்களக்குடியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில், திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய 250-க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இதில் கட்டவளாகம் பஞ்சாயத்து, கீழ்க்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் வினோகர் (32) என்ற இளைஞர், தன்னை திருவாடானை வட்டாட்சியராக 6 மாத காலம் நியமனம் செய்ய வேண்டும் என்ற வினோத கோரிக்கை மனுவைக் கொடுத்து, மாவட்ட ஆட்சியரைத் திகைக்கவைத்தார்.

வாலிபர் கொடுத்த மனு
வாலிபர் கொடுத்த மனு

அந்த மனுவில், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக, திருவாடானை தாலுகாவில் இது அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள படிப்பறிவு இல்லாத ஏழைகள், அரசு அலுவலகங்களுக்கு சான்றிதழ்கள் பெறுவதற்குச் செல்லும்போது, அவர்கள்மீது அரசு அதிகாரிகள் இரக்கம் காட்டுவதில்லை. அவர்களைத் தரக்குறைவாக பேசுவதுடன், சான்றிதழுக்கு அரசு நிர்ணயித்த தொகையைவிட பலமடங்கு கூடுதல் தொகையை லஞ்சமாகக் கேட்கின்றனர். விவரம் அறியா மக்களும் தங்களுக்கு வேலை முடிய வேண்டும் என்பதற்காக, அது லஞ்சம் எனத் தெரியாமலே கொடுக்கும் நிலை உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. எனவே, திருவாடானை தாலுகாவில் நிலவும் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த, திருவாடானை வட்டாட்சியராக என்னை 6 மாத காலம் நியமிக்க வேண்டும். எனது 6 மாத கால வட்டாட்சியர் பணியில் லஞ்சத்தை முழுமையாக ஒழிப்பேன் என உறுதி கூறுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், 'மறுபடியும் முதல்ல இருந்தா' என நினைக்காத குறையாக, அந்த இளைஞரின் மனுவை வாங்கிக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி அனுப்பிவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து வினோகரிடம் கேட்டபோது, 'தன் தகப்பனார் பெயரில் இருந்த பட்டா பதிவுகளை மாற்றம் செய்ய, திருவாடானை தாசில்தாரிடமும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியிலும் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை' என்றார். பின்னர், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித பலனுமில்லை, பதிலும் இல்லை.

வாலிபர் வினோகர்
வாலிபர் வினோகர்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெருகிவிட்டது. அதிகாரிகளின் இந்தச் செயலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருவாடானைப் பகுதிகளில் அரசு அலுவலர்கள் செய்யும் ஊழலைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படும் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு தாசில்தராக, 6 மாத காலம் நியமனம் செய்ய கேட்டுக்கொள்கிறேன். அப்படி நியமனம் செய்தால், ஆறுமாத காலத்தில் ஊழலை ஒழித்து, பாமர ஏழை மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக மனு கொடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், அந்த மனுவின் பேரில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு