Published:Updated:

திமுகவுக்குச் சாதகமாகச் செயல்படுகிறாரா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்? - அதிமுக புகாரும் விளக்கமும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாக்குச்சீட்டுகளைப் பார்வையிடும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
வாக்குச்சீட்டுகளைப் பார்வையிடும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

`` தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுத்து, உடனடியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்கிறார் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான சு.ரவி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக்.6), அக். 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்திருக்கிறது. ஏற்கெனவே, சில இடங்களில் அதிமுக-வினரின் வேட்புமனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுவதாக அந்தக் கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருக்கும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தி.மு.க வேட்பாளர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர் அ.தி.மு.க தரப்பினர்.

அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி
அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராணிப்பேட்டை அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சு.ரவி, ``நேற்று இரவு மாவட்டத்திலிருக்கும் அனைத்து பி.டி.ஓ-க்களுக்கும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. ‘உடனடியாக அனைவரும் ராணிப்பேட்டை வாருங்கள். காலை 6 மணிக்கு மீட்டிங் இருக்கிறது’ என்று ஆட்சியர் கூறியிருக்கிறார். பி.டி.ஓ-க்களும் இரவோடு இரவாக மாவட்ட தலைநகரில் சென்று தங்கியுள்ளனர். காலை விடிந்தவுடன் மீட்டிங் தொடங்கியிருக்கிறது. பி.டி.ஓ-க்கள் அனைவரிடமும் தி.மு.க வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதை வாங்கிய பி.டி.ஓ-க்களிடம், `இவர்களைத்தான் வெற்றிப்பெற்றவர்களாக நீங்கள் அறிவிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று ரிசல்ட்டை எவ்வளவு தாமதப்படுத்திச் சொல்ல முடியுமோ... அவ்வளவு நேரம் தாமதப்படுத்துங்கள்’ என்று ஆட்சியர் கூறியிருக்கிறார். `சார்... நீங்கள் சொல்வதைப்போல் செயல்பட்டால் எங்களுக்குத்தான் பிரச்னை’ என்று மறுப்பு தெரிவித்த பி.டி.ஓ-க்களிடம், `எந்தப் பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஆட்சியரே சொல்லியிருப்பதாக எங்களுக்கு உறுதிபடத் தகவல்கள் வந்துள்ளன. எனவே, தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்றார்.

`பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி' - திமுக நிர்வாகிமீது மகளிரணிப் பிரமுகர் புகார்
கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அலுவலர்கள் தேர்வுசெய்யும் பணி
கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அலுவலர்கள் தேர்வுசெய்யும் பணி

அதிமுக-வின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து ராணிப்பேட்டை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியனிடம் விளக்கம் கேட்டோம். ‘``அந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவில்லை. தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார்கள். வாக்குச்சாவடி மையங்களுக்கு நுண் பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் அனுப்புவது மற்றும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது தொடர்பாகத்தான் காலையில் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் மீட்டிங் நடைபெற்றது. இவ்வளவுதானே தவிர அ.தி.மு.க தரப்பில் சொல்லும்படி எந்தப் பட்டியலையும் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுக்கவும் முடியாது. புகார் கூறிய தரப்புக்கு என் தரப்பில் விளக்கமும் கொடுத்துவிட்டேன். தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும்’’ என்றார் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு