Published:Updated:

`போலீஸ் கெடுபிடி; 10 பேர் மட்டுமே பங்கேற்பு!’ - முகக்கவசம் அணிந்து தாலி கட்டிய மாப்பிள்ளை #corona

முகக் கவசம் அணிந்திருந்த மணமக்கள்
முகக் கவசம் அணிந்திருந்த மணமக்கள்

பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில், வாலாஜாபேட்டை கோயிலில் தனியார் நிறுவன ஊழியரின் திருமணம் இன்று நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவி, நெசவுத் தொழிலாளி. இவரின் மகன் ராஜ்குமார் (31), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

மணமக்கள்
மணமக்கள்

ராஜ்குமாருக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலன் என்பவரின் மகள் கமலாவுக்கும் (28) திருமணம் செய்து வைக்க இரு வீட்டு பெரியவர்களும் கூடிப் பேசி ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடத்த முடிவெடுத்து முகூர்த்த நேரத்தைக் குறித்தனர். அழைப்பிதழ்களை அச்சடித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்திருந்தனர்.

கொரோனா ஆய்வு
கொரோனா ஆய்வு

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், திருமணம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், குறித்த நேரத்தில் திருமணத்தை நடத்த வாலாஜாபேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமதி கேட்டு நேற்று மாலை வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

காவல்துறை உயரதிகாரிகள் சில நிபந்தனைகளை விதித்து திருமணத்துக்கு அனுமதி வழங்கினர். அதையடுத்து, பெருமாள் கோயிலில் இன்று காலை 7.30 மணியளவில் திருமணம் நடைபெற்றது. அப்போது, மணமக்கள் முகக் கவசம் அணிந்திருந்தனர். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

முகக் கவசம் அணிந்திருந்த மணமக்கள்
முகக் கவசம் அணிந்திருந்த மணமக்கள்

500-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்த நிலையில் கட்டுப்பாடுகள் காரணமாகப் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையுடன், மணமகன் வீட்டில் எளிய முறையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாலைகளை அடைத்துக் காவல் துறையினர் கெடுபிடி காட்டியதால், திருமண வீட்டார் கொஞ்சம் சிரமத்துக்குள்ளாகினர். தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தாலும் தடங்கல் இல்லாமல் குறித்த நேரத்தில் திருமணம் நடந்ததால் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு