Published:Updated:

ராணிப்பேட்டை:`சூழல் பாதிப்புக்கு நாங்கள் காரணமில்லை!’ - மாஸ்டர் பிளானில் ரசாயன ஆலைகள்

ரசாயன தொழிற்சாலை
ரசாயன தொழிற்சாலை

` `சூழல் பாதிப்புக்கு நாங்கள் காரணமில்லை’ என்றுகூறும் அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?’ என்று கேள்வியெழுப்பிக் கொதிக்கிறார்கள் ராணிப்பேட்டையின் சூழலியல் ஆர்வலர்கள்.

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியிலுள்ள பல்வேறு ரசாயன தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கழிவுகளை நிலத்திலும் நீர்நிலைகளிலும் விடுவதால், அந்த நகரமே அழிவை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்கிறது. இது குறித்து, 16.02.2020 தேதியிட்ட `ஜூனியர் விகடன்’ இதழில் `மனிதர் வாழ தகுதியற்ற பூமியா ராணிப்பேட்டை?’ என்கிற தலைப்பில் சூழலியல் பாதிப்பு குறித்து அலசல் கட்டுரை வெளியாகியிருந்தது.

இந்தநிலையில், ராணிப்பேட்டையில் ஒட்டுமொத்த சூழல் பாதிப்புகளையும் ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க நிபுணர்குழுவை அமைத்து, அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு.

ராணிப்பேட்டை சிப்காட்
ராணிப்பேட்டை சிப்காட்

இது தொடர்பாகவும், 16.08.2020 தேதியிட்ட`ஜூனியர் விகடன்’ இதழில் `உருக்குலையும் ராணிப்பேட்டை! பாதுகாக்குமா பசுமை தீர்ப்பாயம்?’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. `திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம், மல்லாடி ட்ரக்ஸ் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான இரண்டு மத்தியக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய ஆறு நிறுவனங்களும்தான் சூழல் மாசுபாட்டுக்கு மிக முக்கியக் காரணம்’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

உருக்குலையும் ராணிப்பேட்டை!

இந்தநிலையில், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனம் தரப்பில் விளக்கம்கொடுத்துள்ளனர். ``எங்கள் நிறுவனம் 60 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சூழல் மாசு ஏற்படாமலிருக்க, உலகத்தரம் வாய்ந்த சுத்திகரிப்பு முறைகளை நிறுவியிருக்கிறோம். மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டுத்தான் உற்பத்தியைத் தொடர்கிறோம். அதற்கான உரிய அனுமதிச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம். அரசு அதிகாரிகளும் அடிக்கடி ஆய்வு செய்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக எந்தவிதமான சூழலியல் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் கோபி சத்தியராஜன்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கோபி சத்தியராஜன்

அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனத்தின் இந்த விளக்கம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கோபி சத்தியராஜன் உள்ளிட்ட சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், ``சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று கூறும் அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? திருமலை கெமிக்கல்ஸ், அலட்ரா மரைன் நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ரசாயனக் கழிவுகளை இவர்களுடைய நிறுவனம் திறந்துவிடுவதில்லையென்றால், அந்தப் பகுதியிலுள்ள நீர்நிலைகளில் நிரம்பி வழியும் ரசாயனக் கழிவுகள் எங்கிருந்து வந்தன? முறைகேடாகச் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து மாஸ்டர் பிளான்போட்டு நாடகமாடுகிறார்கள்.

அல்ட்ரா மரைன் நிறுவனத்துக்கு எதிரில் ஆஞ்சநேயர் கோயில் குளம் இருக்கிறது. அந்தக் குளம் முழுவதும் ரசாயனக் கழிவுநீர்தான் நிரம்பியிருக்கிறது. அந்தக் குளத்திலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக நீர்வரத்து கால்வாய் வெட்டி வானாப்பாடி சித்தேரி வழியாக 150 ஏக்கர் பரப்பளவுகொண்ட தண்டலம் ஏரியில் கழிவுநீரைக் கொண்டு சேர்க்கிறார்கள். இந்த நிறுவனங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள் உள்ளன. இவர்கள்மீது தவறு இல்லையென்றால், அந்தக் கழிவுநீரைச் சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தி, எந்த நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறது என்று கண்டுபிடித்துச் சொல்லட்டும். அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்? சூழலியல் பாதிப்பு ஏற்படுத்தும் இது போன்ற நிறுவனங்களை ராணிப்பேட்டையிலிருந்து மொத்தமாகக் களையெடுத்து பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்கிறார்கள் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு