Published:Updated:

`வரலாற்றைப் பேசினால் போதாது; ராஜா, ராணி சின்னங்களையும் பாதுகாக்கணும்!’ -ராணிப்பேட்டை அவலம்

ராணிப்பேட்டை நகரம் உருவாகக் காரணமான ராஜா தேசிங்கு, அவரின் மனைவி ராணிபாயின் நினைவு மணிமண்டபம் பாதுகாக்கப்படவில்லை. புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகும், இந்த அவலம் நீடிப்பதாகப் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ராஜா தேசிங்கு, அவரின் மனைவி ராணிபாயின் நினைவு மணிமண்டபம்
ராஜா தேசிங்கு, அவரின் மனைவி ராணிபாயின் நினைவு மணிமண்டபம்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம், மன்னர் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவி ராணிபாயின் நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கிய பகுதியாக ராணிப்பேட்டை இருந்திருக்கிறது. ராஜா தேசிங்கு `கப்பம்’ கட்ட மறுத்ததால், செஞ்சிக்கோட்டை மீது ஆற்காடு நவாப்புகள் படையெடுத்து ராஜாவைக் கொன்றனர். ராஜா தேசிங்கின் உடல் எரிக்கப்பட்டபோது, அவரின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறினார். 

சிதிலமடைந்து கிடக்கும் நினைவு மண்டபம்
சிதிலமடைந்து கிடக்கும் நினைவு மண்டபம்

இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான், ஆற்காடு பாலாற்றின் மறு கரையில் ராஜாவுக்கும், ராணிபாயிக்கும் பளிங்குக் கற்களால் மணிமண்டபங்களை எழுப்பினார். ராணியின் உயிர்த்தியாகத்தைப் போற்றும் வகையில்தான் `ராணிப்பேட்டை’ நகரையும் உருவாக்கியதாக வரலாறு சொல்கிறது. அந்த நினைவு மணிமண்டபங்கள், இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. சமூக விரோதக் கும்பல்கள் மது அருந்துவதற்கும், சீட்டு விளையாடுவதற்கும் மணிமண்டபங்களைப் பயன்படுத்திவருகிறார்கள்.

Vikatan

மணிமண்டபங்களைச் சுற்றிலும் புதர் மண்டிக் கிடக்கிறது. அதில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கற்கள் காலப்போக்கில் பெயர்த்தெடுக்கப்பட்டுவிட்டன. மன்னரின் மணிமண்டபம் என்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லாமல் பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

சிதிலமடைந்து கிடக்கும் நினைவு மண்டபம்
சிதிலமடைந்து கிடக்கும் நினைவு மண்டபம்

புதிய மாவட்ட தொடக்க விழா கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். ராணிபாயின் உயிர்த் தியாகத்தை எடுத்துரைக்கும் வரலாற்றைக் கூறிதான் விழாவில் அனைவரும் பெருமிதம் கொண்டனர். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மணி மண்டபங்களை இதுநாள் வரை சீரமைக்காமல் இருப்பதைப் பார்த்து பொதுமக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 

எனவே, பாலாற்றங்கரையில் புதர் மண்டிக் கிடக்கும் ராஜா ராணியின் மணிமண்டபங்களை விரைந்து சீரமைப்பதுடன், சுற்றுலாத்தலமாக மாற்றித் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். வரலாற்றுச் சின்னங்களைக் காப்பாற்றுவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் ராணிப்பேட்டை புதிய மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

புதர் சூழ்ந்திருக்கும் அவலம்
புதர் சூழ்ந்திருக்கும் அவலம்

இதுபற்றி, ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத்திடம் பேசினோம். ``தேசிங்கு ராஜா, ராணிபாயின் மணி மண்டபங்களைப் புதுப்பித்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அது, பட்டா நிலம். அரசே நிலத்தைக் கைப்பற்றி சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்காக நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையுமே பாதுகாப்போம். மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டுவருவோம்’’ என்றார்.