Published:Updated:

`3% இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் அவர்!'- கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள்

ர.ரகுபதி

முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு, ராசிபுரம் அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டிவருகின்றனர் கிராம மக்கள்.

karunanidhi
karunanidhi

ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலின மக்கள் 10 பேர், தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். கோயில் பணிக்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் தி.மு.க மற்றும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

karunanidhi
karunanidhi

இதுபற்றி அப்பகுதி மக்களிடம் பேசியபோது, 'எங்கள் இனமக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் கருணாநிதி. பல்வேறு உதவிகளை எங்கள் மக்களுக்கு செய்த அவருக்கு நன்றி தெரிவிக்கவும், அவரை போற்றுவதற்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுகிறோம்.

அண்ணா அறிவாலயம், கலைஞர் அறிவாலயம் போல் இந்தக் கோயில், மக்களிடைய பகுத்தறிவை எடுத்துச்செல்ல, உதவ வேண்டிய பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு கருணாநிதி செய்த உதவிகள் காலம் கடந்து நிற்கும். அவரது சாதனைகளைச் சொல்வதற்கு, நாங்கள் ஒரு நினைவாலயம் போல் கட்டுவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்" என்றனர்.

karunanidhi
karunanidhi

ரூ.30 லட்சம் மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கட்டப்படும் கோயிலில் கருணாநிதியின் உருவச்சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் முன்னேற்றப் பேரவை அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.