Published:Updated:

`சாவியைக் காணோம்... கடையைத் திறக்க முடியாது’ -நாடகமாடிய பாம்கோ ஊழியர் ஆர்டிஓ-விடம் சிக்கியது எப்படி?

சீல் வைக்கப்பட்ட  பாம்கோ கடை
சீல் வைக்கப்பட்ட பாம்கோ கடை

அந்த விற்பனை அங்காடி, அடிக்கடி பூட்டிக் கிடந்துள்ளது. கடையின் அறிவிப்பு பலகையில் பொறுப்பாளர் விடுமுறை என்று தொடர்ச்சியாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிகாரிகளுக்குப் புகாராகப் போக, நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

'சீப்பை ஒளிச்சு வச்சுட்டா எப்படி மாப்ள தலை சீவுவாரு, எப்படி கல்யாணம் நடக்கும்’ என்று போண்டாமணி - வடிவேலுவிடம் சொல்லும் இங்கிலீஷ்காரன் படத்தின் பிரபல காமெடியைப்போல காரைக்குடியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ) மூலம் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருள்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி பாம்கோ நம்பர் - 3 கடையில் இருந்து பொருள்களை, கடை ஊழியர் பாலு வெளிச்சந்தைக்கு விற்பனை செய்துவந்தது வெளியே தெரியவந்தது.

பாலு
பாலு

மேலும் அந்த விற்பனை அங்காடி, அடிக்கடி பூட்டிக் கிடந்துள்ளது. கடையின் அறிவிப்புப்பலகையில் பொறுப்பாளர் விடுமுறை என்று தொடர்ச்சியாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிகாரிகளுக்குப் புகாராகப் போக, நேற்று ஆய்வு செய்யப்பட்டது. அங்காடியில் பணியாற்றும் ஊழியர் பாலு, ``கடையின் சாவி வீட்டில் உள்ளது, அதை என் மனைவி எடுத்துச் சென்றுவிட்டார், சாவி காணாமல் போகிவிட்டது. சாவி இல்லாமல் கடையைத் திறக்க முடியாது" எனச் சாவியைத் தானே ஒளித்து வைத்துக் கொண்டு அதிகாரிகள் முன் பொய்யான தகவல் அளித்து பெரும் நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடையின் பூட்டை உடைத்து ஆய்வு செய்ததில் ஒவ்வொரு பொருளிலும் 50 கிலோ, 100 கிலோ என்று அதிகளவு எடை குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பொருள்கள் குறைந்ததற்கு முறையான கணக்கையும் பாலு காட்டவில்லை. இதனால் அவர்மீது `துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் காரைக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட பாம்கோ மேலாளர் திருமாவளவனைத் தொடர்புகொண்டபோது, ``குறிப்பிட்ட அந்தக் கடை பூட்டி இருந்ததால் லோக்கல் ஆர்.டி.ஓ சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது இருப்பு சற்று குறைவாக இருந்துள்ளது. ஆனால், சரக்கு பக்காவாக இருந்துள்ளது. கடை பூட்டி இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கொடுத்துள்ளோம்" என்றார்.

தகவல் பலகை
தகவல் பலகை

மேலும் தேவகோட்டை ஆர்.டி.ஓ சுரேந்திரன் அவர்களிடம் பேசியபோது, ``பாம்கோ நம்பர் -3 கடை பூட்டிக் கிடப்பதாகத் தகவல் கிடைத்ததால் அந்தக் கடையை ரகசியமாக ஆய்வு செய்ய திட்டமிட்டோம். அதனால் அந்தக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டோம். அப்போது கடை ஊழியர் பாலுவின் சகோதரர் ஜெயக்குமார் என்பவர் கடைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். அதனால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று கடையில் ஆய்வு செய்ய சென்றபோது சாவியை ஊழியர் பாலு காணவில்லை என்று தெரிவித்ததால் பூட்டை உடைத்து ஆய்வு செய்தோம். அப்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்கள் கணக்கில் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்துள்ளோம். அநேகமாக அவர் மீது நாளை (இன்று 15.05.2020) நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்" என்றார்.

சட்ட விரோதமாக பிடிபட்ட பொருள்கள்
சட்ட விரோதமாக பிடிபட்ட பொருள்கள்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம், ``பாம்கோ நிறுவனங்கள் முழுக்க முழுக்க ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுகிறது. பாம்கோ ஊழியர்கள் தவறு செய்வதற்கு அ.தி.மு.க-வினர் உடந்தையாக இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாம்கோவில் ஊழல் நிறைந்து கிடக்கிறது. தனி ஆணையம் அமைத்து நியாயமாக விசாரணை செய்தால் பாம்கோவில் பல உண்மைகள் வெளிவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு