Published:Updated:

`வீட்டுக்குப் பக்கத்திலேயே கழிப்பறை, சொந்தமா மளிகைக் கடை!'- மாற்றுத்திறனாளியை நெகிழவைத்த இளைஞர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாற்றுத்திறனாளியை நெகிழவைத்த இளைஞர்கள்
மாற்றுத்திறனாளியை நெகிழவைத்த இளைஞர்கள்

''இந்தக் கடைக்கு நீங்கதான் ஓனர்னு சொல்லி என்னையே கடைய திறக்கச் சொன்னபோது அப்படியே றெக்கைகட்டி பறக்கிற மாதிரி இருந்துச்சு. எங்களுக்கு இந்த உதவியைச் செஞ்சவங்க எல்லாரையும் எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்!''

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வலங்கொண்டான் விடுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பாக்கியம், போலியோவால் பாதிக்கப்பட்டவர். இடது கையும் இரண்டு கால்களும் முடங்கிப் போனவருக்கு, வீட்டில் கழிப்பறை இல்லாததால், இயற்கை உபாதைகளுக்குச் சிரமப்படும் நிலை. மகளை இடுப்பில் தூக்கிச் சுமந்து காட்டுக்குக் கொண்டு சென்ற அவரின் தாய் காளியம்மாளுக்கோ, தற்போது வயோதிகத்தின் காரணமாகத் தூக்கிச் சுமக்க முடியாத நிலை. இயற்கை உபாதைகளுக்காக தினம், தினம் பாக்கியம் சிரமப்பட்டுக்கொண்டிருக்க, வறுமைக்கும் வீட்டில் பஞ்சமில்லை.

`வீட்டுக்குப் பக்கத்திலேயே கழிப்பறை, சொந்தமா மளிகைக் கடை!'- மாற்றுத்திறனாளியை நெகிழவைத்த இளைஞர்கள்

பாக்கியத்தின் அவஸ்தை குறித்தும் விகடன் இணையதளத்தில் "வீட்டுல கழிப்பறையில்ல; காட்டுக்குத் தூக்கிட்டுப் போகணும்!-மாற்றுத்திறனாளி மகளின் அம்மா" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதோடு, பாக்கியத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். உடனே, அரசு அதிகாரிகளைப் பாக்கியத்தின் வீட்டுக்கு அனுப்பி வைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். தற்போது பாக்கியத்துக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர நாற்காலி கிடைத்துள்ளது. அதோடு, அரசு சார்பில் பாக்கியத்தின் வீட்டின் அருகே கழிப்பறை கட்டிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாக்கியத்தின் நீண்டநாள் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, "சின்னதா ஒரு பெட்டிக்கடை வச்சிட்டா போதும், ரெண்டு பேரும் உழைச்சு பிழைச்சுக்குவோம்'' என்று காளியம்மாள் பேசியதையும் எழுதியிருந்தோம். கட்டுரையைப் படித்த நெக்குருகிப்போன விகடன் வாசகர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். வாழ்வாதார உதவிசெய்ய முன்வந்த சென்னையைச் சேர்ந்த 'டாக்டர் கலாம் இளைஞர்கள் குழு'வைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மளிகைக் கடை அமைத்துக் கொடுத்து தாயையும், மகளையும் நெகிழ வைத்திருக்கின்றனர்.

`வீட்டுக்குப் பக்கத்திலேயே கழிப்பறை, சொந்தமா மளிகைக் கடை!'- மாற்றுத்திறனாளியை நெகிழவைத்த இளைஞர்கள்

முகத்தில் சந்தோஷ ரேகை ஓட தவழ்ந்தவாறே வந்து மளிகைக் கடையைத் திறந்து வைத்த பாக்கியத்திடம் பேசினோம். "ரொம்ப வருஷமா கழிப்பறை இல்லாம கஷ்டப்பட்டுக் கிடந்தேன். ஒரு கழிப்பறைக் கட்டிக்கொடுத்துட்டா போதும்னுதான் நெனச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ கழிப்பறை வேலை நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா, மளிகைக் கடை வைப்போம்னு கனவுலகூட நெனச்சுப் பார்க்கலை. இந்தக் கடைக்கு நீங்கதான் ஓனர்னு சொல்லி என்னையே கடையத் திறக்கச் சொன்னபோது அப்படியே றெக்கை கட்டி பறக்கிற மாதிரி இருந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களுக்குச் சொந்தபந்தம்னு எந்த உதவிகளும் கிடையாது. யாரோ முகம் தெரியாதவங்க எங்களுக்கு இந்த உதவிகளைச் செஞ்சுக்கொடுத்திருக்காங்க. அவங்க எல்லாரும் சேர்ந்து செஞ்ச உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம். என்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்போம். அம்மா, எனக்காக இத்தனை வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க. உடம்பும் சரியில்லாம போச்சு. இந்தக் கடையை வச்சு உழைச்சு சம்பாதிச்சு, அம்மாவ நல்லா பார்த்துக்கணும்" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

`வீட்டுக்குப் பக்கத்திலேயே கழிப்பறை, சொந்தமா மளிகைக் கடை!'- மாற்றுத்திறனாளியை நெகிழவைத்த இளைஞர்கள்

டாக்டர் அப்துல்கலாம் இளைஞர்கள் குழுவினரிடம் பேசினோம்.

"வெவ்வேறு கிராமங்கள்ல இருந்து சென்னைக்கு வந்து இங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். 70 பேர் வரையிலும் இருக்கும் நாங்க ஒரு குழுவா சேர்ந்து ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து ஒரு சிறு தொகையை ஒதுக்கி வாழ்வாதாரமின்றி கஷ்டப்படுபவர்களுக்கு எங்களால் முடிந்த சிறு, சிறு உதவியைச் செய்து வருகிறோம். விகடன் இணையதளத்தில் பாக்கியம் - காளியம்மாள் கட்டுரையைப் படித்ததும், அவங்களுக்கு வாழ்வாதார உதவியா அவங்க கேட்ட மளிகைக் கடை வெச்சுக் கொடுக்கணும்னு தோணுச்சு. எல்லாரும் கலந்து ஆலோசித்து இப்போ அதை நிறைவேத்திட்டோம். அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். நாங்க இதுவரைக்கும் செஞ்ச உதவிகள்ல இதுதான் பெரிய உதவி. இன்னும் தொடர்ந்து செய்யணும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு