Published:Updated:

`குட்நைட் சொல்லிவிட்டுச் சென்றாள்..' -சென்னை பயிற்சி மருத்துவர் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பயிற்சி டாக்டர் பிரதீபா
பயிற்சி டாக்டர் பிரதீபா

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்துவந்த மாணவி, மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பிரதீபா, மரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தவர் பிரதீபா. இவர், இன்று காலை அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பயிற்சி டாக்டர் பிரதீபா, மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``கடந்த 2015-ம் ஆண்டு முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரதீபா படித்துவந்தார். இவரின் அப்பா ரமேஷ். வேலூரில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்திவருகிறார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி

சென்னை பெரம்பூரில் பிரதீபா தங்கியிருந்துள்ளார். கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவக்கல்லூரி விடுதி அறை எண் 6-ல் தங்கியிருந்தார். 30.4.2020 -ம் தேதி காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பணியில் இருந்துள்ளார். பணி முடிந்து இரவு 9 மணிக்கு விடுதிக்குத் திரும்பி வந்துள்ளார். பின்னர் விடுதியில் தங்கியிருந்த சக பயிற்சி டாக்டர்கள், மாணவிகளுடன் பேசிவிட்டு பிரதீபா, அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். பின்னர் இன்று காலை 7.40 மணி வரை அவரின் அறை திறக்கப்படவில்லை.

இதனால் பிரதீபாவின் பக்கத்து அறையில் தங்கியிருந்த 2 மாணவிகள் சந்தேகப்பட்டு கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, செக்யூரிட்டி பணியில் இருந்த அந்தோணியிடம் தகவலைத் தெரிவித்துள்ளனர். பின்னர் விடுதி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரதீபாவின் அறைக்கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது சுயநினைவு இல்லாமல் மயங்கிய நிலையில் பிரதீபா இருந்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
`பிரிக்கப்படாத பிறந்தநாள் கேக் பார்சல்!’ - கொரோனா பணிக்குப்பின் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு

அவரைப் பரிசோதித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பிரதீபா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகுதான் பிரதீபா மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

மாணவி மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் பிரதீபாவின் பெற்றோர், குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது `போனில்கூட சந்தோஷமாகத்தான் பேசினாள்' என்று கூறியுள்ளனர்.

பிரதீபாவின் செல்போன் அழைப்புகளையும் அவர் தங்கியிருந்த அறையிலும் போலீஸார் ஆய்வு நடத்தினர். அதனடிப்படையிலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின் பயிற்சி டாக்டர் பிரதீபா, மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஒரு முகநூல் பதிவில், பயிற்சி மருத்துவர் பிரதீபா, லேபர் வார்டில் கடந்த ஒரு மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர் ரொம்ப அமைதியானவர். நேற்றிரவு பெற்றோரிடம் செல்போனிலும் தோழிகளிடம் நேரிலும் பேசியுள்ளார். பிரதீபாவின் திடீர் மரணத்துக்கு கொரோனா பரவல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதீபா மரணம் குறித்த பதிவு
பிரதீபா மரணம் குறித்த பதிவு
`விடுதியில் மர்மமாக இறந்த மருத்துவ மாணவி' -அதிர்ச்சியில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம்

இதற்கிடையில், பிரதீபா மரணம் குறித்து முழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவர்கள் சங்கங்கள் விடுத்துள்ளன. ஏற்கெனவே பயிற்சி டாக்டர்கள், அரசு டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நேரத்தில் பயிற்சி டாக்டர் பிரதீபாவின் மரணம், டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி டாக்டரும் இறுதியாண்டு மாணவியுமான பிரதீபா, பணியாற்றிய வார்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலம் பிரதீபாவுக்கு பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில் நம்மிடம் பேசிய பிரதீபாவின் தோழிகள் கூறுகையில், ``கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டராகப் பணியாற்றிய பிரதீபா, நேரம் பார்க்காமல் வேலை பார்த்துவந்தார். நோயாளிகளிடமும் சக மருத்துவர்களிடமும் எங்களுடனும் அன்பாகவே பேசுவாள். சென்னை பெரம்பூரில் தங்கியிருந்த பிரதீபா, ஊரடங்கு காரணமாகதான் வீட்டுக்குச் செல்லவில்லை. நேற்றிரவுகூட ஒன்றாகத்தான் சாப்பிட்டோம். டூயூட்டி குறித்து பேசினோம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பின்னர் குட் நைட் சொல்லிவிட்டு படுக்கச் சென்றோம். காலையில் பிரதீபாவுக்கு டூயூட்டி. ஆனால், அவர் அறையை விட்டு வெளியில் வரவில்லை. அதனால்தான் கதவை தட்டிப்பார்த்தோம். உள்ளே சென்றபோது பெட்டில் தூங்குவதைப் போல படுத்திருந்தாள். தட்டி எழுப்பிப் பார்த்தும் கண்விழிக்கவில்லை. அவளின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது" என்றனர் கண்ணீருடன்.

பயிற்சி டாக்டர் பிரதீபாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதியாகியுள்ளதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு