Published:Updated:

அதிகரித்த பரிசோதனை; அழுத்தம் கொடுத்த எதிர்க்கட்சிகள்! - மதுரை முழு ஊரடங்கின் பின்னணி

மதுரை
மதுரை

மதுரையில் கடந்த 10 நாள்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்திய பின்புதான் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தியதற்குப் பிறகுதான மதுரையில் கொரொனா பரவலின் வீரியம் தெரிய வந்துள்ளது, அதைத் தொடர்ந்தே தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்

சென்னையோடு ஒப்பிடும்போது மதுரையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைவாகத் தெரிந்தாலும், மக்கள்தொகை அடிப்படையில் பார்க்கும்போது சென்னைக்கு நிகராக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்

நேற்று மட்டும் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மொத்த பாதிப்பு 849 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாள்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்திய பின்புதான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை

ஆனால், ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் மிகக் குறைவாகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனைகளை அதிகப்படுத்தவிலை.

இந்த நிலையில்தான் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். தொடர்ந்து தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதன்பின் பரிசோதனைகளை அதிகப்படுத்தினார்கள். அதன்முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்தான் தற்போது முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
எதிர்க்கட்சிகள் போராட்டம்

இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவதில் மாவட்ட நிர்வாகத்துக்கு 2 மணிநேரம் குழப்பம் ஏற்பட்டது. இந்தநிலையில் மதுரை கொரொனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக தர்மேந்திர பிரதாப் யாதவ் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் மாற்றப்பட்டு, டாக்டர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இதற்குக் காரணம் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அளித்த புகார்தான் என்கிறார்கள்.

`எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

மதுரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மேந்திர பிரதாப் யாதவ், ஒரு வாரம் ஆகியும் மதுரைக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்துதான் டாக்டர் சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இதுபற்றிக் கருத்து தெரிவித்துள்ள எம்.பி சு.வெங்கடேசன், ``நோய்த்தொற்று வேகம் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. மக்களிடம் அச்சம் மேலோங்குகிற நேரத்தில் துரித நடவடிக்கைகள் மூலம் நோய்ப் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்தி நம்பிக்கையை உருவாக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் உடனடிக் கடமை. ஆய்வுக்கூட்டத்தை தொலைபேசியிலும் காணொலியிலும் மட்டும் நடத்தும் காலமல்ல இது'' என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு