Published:Updated:

தென்மண்டல ஐ.ஜி முருகன்; தூத்துக்குடிக்குப் புது எஸ்.பி! -இடமாற்றப் பின்னணி

ஐ.ஜி முருகன்
ஐ.ஜி முருகன்

சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக தூத்துக்குடி எஸ்.பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்மண்டல ஐ.ஜி பதவியும் காலியானதால் அந்தப் பதவிக்கு முருகன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை விசாரித்த போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர், காவலர்கள் என 27 பேர், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குப் புதியதாக நியமிக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

சாத்தான்குளம் சம்பவம் சர்ச்சையான நேரத்தில், ஜெயராஜுக்கும் பென்னிக்ஸுக்கும் இதயநோய் இருந்ததாக தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் பேட்டியளித்தார். இந்தநிலையில் தூத்துக்குடி எஸ்.பி அதிரடியாக இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்த ஜெயக்குமார் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஜி முருகன்

தூத்துக்குடியில் பணியாற்றிய எஸ்.பி அருண் பாலகோபாலன், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐ.ஜியாகப் பணியாற்றிவந்த சண்முக ராஜேஸ்வரன், ஓய்வு பெற்றதால் சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜியாக இருந்த முருகன், அந்த இடத்துக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஐ.ஜி முருகன், ஏற்கெனவே தென்மண்டலத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர். அதனால்தான் இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க முருகன், அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

 எஸ்.பி ஜெயக்குமார்
எஸ்.பி ஜெயக்குமார்

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி, ஜெயக்குமார், சென்னையில் நீண்டகாலம் பணியாற்றியவர். சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் கூடுதல் துணை கமிஷனராக இருந்தவர். இவர் தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ் என்பதால் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில்தான் ஜெயக்குமாரின் பெயரை தூத்துக்குடி எஸ்.பி-க்கு முக்கியமான ஒருவர் பரிந்துரைத்தார்.

அப்போது அவர், `எந்தவொரு சம்பவம் என்றாலும் முதல் ஆளாக ஸ்பாட்டுக்குச் சென்று விசாரணை நடத்துவார், எஸ்.பி- ஜெயக்குமார். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளி தப்பி ஓடிய சம்பவத்தில் திறமையாக துப்பு துலக்கி அவரைப் பிடித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய காலகட்டத்திலும் ரௌடிகள் ஒழிப்பில் திறமையாகச் செயல்பட்டவர்' என சிபாரிசு செய்துள்ளார். மேலும் அந்த மாவட்ட அமைச்சரும் ஜெயக்குமாரை எஸ்.பி-யாக நியமிக்க கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அதனால் ஜெயக்குமாரை , தூத்துக்குடி எஸ்.பி-யாகப் பணியமர்த்தியுள்ளனர்.

தூத்துக்குடி எஸ்.பி இடமாற்றம், தென்மண்டல ஐ.ஜி-யாக முருகன் நியமனம் ஆகியவற்றில் அரசியல் பின்னணியும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சாத்தான்குளம் சம்பவம் காவல்துறையினருக்கும் ஆளுங்கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் காவல்துறையினரின் செயலைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

அதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து தென்மண்டல ஐ.ஜிக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் பெயர் முருகன். சண்முகராஜேஸ்வரன் ஓய்வு பெற இருந்ததால் அந்தப் பதவிக்குப் போட்டி நிலவிவந்தது. சாத்தான்குளம் சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் முருகன்தான் தென்மண்டல ஐ.ஜி பதவிக்குச் சரியாக இருப்பார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பென்னிக்ஸ் ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ் ஜெயராஜ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``தென்மண்டலத்தில் ஐ.ஜியாகவும் நெல்லை சரக டி.ஐ.ஜியாகவும் பணியாற்றிவர் முருகன். அதனால் அவருக்கு தென்மண்டல அரசியல் மற்றும் ஜாதிரீதியான பிரச்னைகளை சுமுகமாகக் கையாளத் தெரியும்.

தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை காவல்துறையினருக்குள் சமூகரீதியான முட்டல் மோதல் நீண்ட காலமாக இருந்துவருகிறது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். அதையெல்லாம் முருகன் சமாளிப்பார் என்ற நம்பிக்கையிலும் சாத்தான்குளம் சம்பவத்தையும் பாத்துக்கொள்வார் என்ற அடிப்படையில்தான் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் விசாரித்தபோது, ``கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எஸ்.பி-யாக அருண் பாலகோபாலன் பணியமர்த்தப்பட்டார். அவரை தூத்துக்குடிக்குப் பணியமர்த்தியதில் முக்கியப் புள்ளிக்குப் பெரும் பங்கு உள்ளது. கொரோனா காலகட்டத்தில் தூத்துக்குடிக்கு வந்த அந்த முக்கியப் புள்ளியை சைரன் இல்லாத காரில் சென்று சந்தித்துவிட்டு வந்ததாக ஒரு தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் அந்த விவகாரத்தில் எஸ்.பி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போலீஸ்
போலீஸ்
மாதிரிப் படம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக அருண்பால கோபாலன் பணியாற்றிய காலகட்டத்தில் உளவுத்துறை மூலம் காவல்துறை தலைமை அலுவலகத்துக்குச் சில புகார்கள் சென்றன. அதில் முக்கியமான ஒன்று, தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நடந்த ஒரு கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ஜெயராஜ் மரணச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது எஸ்.பி.அலுவலகத்துக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. ஆனால் அதற்கெல்லாம் எஸ்.பி அருண் பாலகோபாலன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் இப்படியொரு சிக்கலில் சாத்தான்குளம் காவல்நிலையம் சிக்கிக்கொண்டது" என்றனர்.

தென்மண்டல ஐ.ஜியாக முருகன் பணியமர்த்தப்பட்டதும் அவரைக் குறித்து இன்னொரு முக்கிய தகவல் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் வட்டமடிக்கிறது. ``சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் முருகன் பணியாற்றியபோது ஒரு குற்றச்சாட்டில் சிக்கி அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் அவருக்கு மீண்டும் தென்மண்டல ஐ.ஜி பதவியா எனக் குறிப்பிட்ட ஐபிஎஸ் வட்டார வாட்ஸ் அப் குரூப்பில் விவாதம் நடந்துள்ளது.

சாத்தான்குளம்: `விடிய விடிய அடி;  லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

ஐ.ஜி முருகன் மீண்டும் தென்மண்டலத்துக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளதால் அவரைப்பற்றி நன்றாகத் தெரிந்த எஸ்.பி-க்கள் முதல் காவலர்கள் வரை மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்" என்கின்றனர் விவரம் தெரிந்த காக்கிகள்.

அடுத்த கட்டுரைக்கு