Published:Updated:

`முகநூல் கவிதைக்காக பெ.மணியரசன் மீது வழக்கு!' - பா.ஜ.க-வின் கோபத்துக்கு அது மட்டும்தான் காரணமா?

பெ. மணியரசன்
பெ. மணியரசன்

இந்தக் கவிதையில் சட்டத்துக்குப் புறம்பான கருத்து எதுவுமில்லை. ஆனால், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். பா.ஜ.க-வினரின் தூண்டுதலாலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்கள்.

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டதாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இது மிகப்பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

குறிப்பாக, பெ.மணியரசன் மூன்று மாதங்களுக்கு முன்பு முகநூலில் பதிவிட்ட கவிதை ஒன்று, பா.ஜ.க-வினர் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இது மட்டும்தான் காரணமா... இவ்வளவு நாள்களுக்குப் பிறகு திடீரென வழக்குப் பாய்வதற்கு அந்தக் கவிதை மட்டும்தான் காரணமாக இருக்குமா... தமிழ்த் தேசியப் பேரியக்க நிர்வாகிகளிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியானபோது, எங்கள் இயக்கத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில், எங்களது தலைவர் பெ.மணியரசன் எழுதிய கவிதை ஒன்றை வெளியிட்டோம். அரசியல் எள்ளலோடும் கவித்துவத்தோடும் அந்தக் கவிதை அமைந்திருந்தது.

`முகநூல் கவிதைக்காக பெ.மணியரசன் மீது வழக்கு!' - பா.ஜ.க-வின் கோபத்துக்கு அது மட்டும்தான் காரணமா?

இந்தக் கவிதையில் சட்டத்துக்குப் புறம்பான கருத்து எதுவுமில்லை. ஆனால், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். பா.ஜ.க-வினரின் தூண்டுதலாலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்கள்.

பெ.மணியரசனிடம் பேசினோம். ``நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது தவறல்ல. நீதிபதிக்கு உள்நோக்கம் இருப்பதாகத்தான் விமர்சிக்கக் கூடாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதிகளே பல தீர்ப்புகளை விமர்சித்துள்ளார்கள். அயோத்தி தீர்ப்பு குறித்து நான் எழுதிய கவிதை பா.ஜ.க-வினரை கோபமடைய வைத்திருக்கும். ஆனால், தற்போதைய வழக்குக்கு அதுமட்டுமே காரணமல்ல. தஞ்சை பெரியகோயில் குடமுழக்கை தமிழில் நடத்த நாங்கள் எடுத்த முயற்சிகளும் சட்டபூர்வமான வெற்றிகளும் பா.ஜ.க-வினரை கோபப்படுத்தியது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

சம்ஸ்கிருதத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்.ஆர்.சி, சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்பதும் அவர்களின் கோபம் அதிகமாகியுள்ளது. அவர்களது தூண்டுதலால்தான் தற்போது என்மீது வழக்கு பாய்ந்துள்ளது” என்றார்.

இக்குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ``பெ.மணியரசன் போன்றவர்கள் மீது வழக்கு போடுவது பா.ஜ.க-வின் வேலையல்ல. கட்சியை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். இவர்மீது வழக்கு பதிவு செய்திருப்பது காவல்துறை. சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகளின் கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது அவர்களது கடமை. சட்டப்படி அவர் இந்த வழக்கை எதிர்கொள்ளதான் வேண்டும். தமிழ்க் குடமுழுக்கு, என்.ஆர்.சி எதிர்ப்புக்காகத்தான் இவர்மீது வழக்கு என்று சொன்னால், இவரைப்போல் நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். மணியரசன் மீதான வழக்குக்கு பா.ஜ.க காரணமல்ல” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு