Published:Updated:

மத்தியில் விஸ்வரூபம் எடுக்கும் மொழிக்கொள்கை! மூடுவிழா காணும் மதுரை ’பொதிகை’?

மதுரை பொதிகை அலுவலகம் ( படம்: ஈ.ஜே.நந்தகுமார் )

பெருமைமிக்க மதுரை கேந்திர அரசு தொலைக்காட்சி நிலையம் தற்போது மூடப்படும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் விஸ்வரூபம் எடுக்கும் மொழிக்கொள்கை! மூடுவிழா காணும் மதுரை ’பொதிகை’?

பெருமைமிக்க மதுரை கேந்திர அரசு தொலைக்காட்சி நிலையம் தற்போது மூடப்படும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
மதுரை பொதிகை அலுவலகம் ( படம்: ஈ.ஜே.நந்தகுமார் )

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், ஒவ்வொரு மாநிலங்களின் நிகழ்வுகளையும் கலாசாரங்களையும் அந்தந்த மாநில மொழிகளில் ஒளிபரப்பி வருகிறது. சென்னையில் தூர்தர்ஷனின் ஓர் அங்கமாக `பொதிகை தொலைக்காட்சி' தொடங்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தென்மாவட்டங்களில் இந்த அலைவரிசை ஒளிபரப்பை மேற்கொள்ள மதுரையில் புதிய கேந்திரம் ஒன்று, கடந்த 2005-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. அன்றைய மதுரை எம்.பி.,யான பி.மோகனின் முழு முயற்சியால் இந்த நிலையம் சாத்தியமானது. அப்படிப்பட்ட பெருமைமிக்க இந்த மதுரை கேந்திர தொலைக்காட்சி நிலையம் தற்போது மொத்தமாக மூடப்படும் நிலையில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.

மதுரை பொதிகை
மதுரை பொதிகை
படங்கள்: ஈ.ஜே.நந்தகுமார்

மதுரை கே.கே.நகரில் விளையாட்டு மைதானமாக இருந்த சுமார் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதில் பசுமையான சூழலில் இரண்டுமாடிக் கட்டடம் கட்டப்பட்டு, தமிழகத்தின் கலாசார மையமாய்த் திகழ்ந்து வருகிறது. தென்மாவட்ட நிகழ்ச்சிகள், பண்பாட்டு நிகழ்வுகள், தென் மாவட்ட திருவிழாக்கள் மற்றும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் நேர்முக உரையாடல்கள் எனப் பலரின் பங்களிப்போடு சிறப்பாகச் செயல்பட்டு வந்தது, பொதிகை தொலைக்காட்சியின் மதுரைப்பிரிவு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கேந்திரத்தில் சுணக்கம் ஏற்பட்டிருப்பது, வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. இதுபற்றி அலுவலக ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “2017-ல் வசுமதி தலைமையேற்றதில் இருந்துதான் இந்தப் பிரச்னை உருவானது. சென்னை, மதுரை, கோவை, திருப்பதின்னு நான்கு மூலைகள்ல இருக்கிற கேந்திரங்களுக்கும் இவர்தான் தலைவர். ஒருத்தரே இவ்வளவையும் எப்படிக் கவனிக்க முடியும்? ஊழியர்களெல்லாம் வேலைசெய்யத் தயாராகத்தான் இருக்கோம். ஆனால், சென்னையில் இருந்து எந்த ப்ராஜெக்டும் தர்றதில்லை. எங்கேயும் போய் நிகழ்ச்சி பண்றதுக்கு எங்களை அனுமதிப்பதும் இல்லை. 30, 35 வருட அனுபவம் உள்ள நாங்கள், இப்போ பல்லாயிரக்கணக்கில சம்பளம் வாங்கிட்டு, சும்மாவே உட்காந்திருக்கோம்” என நொந்துகொண்டனர்.

ஆண்டாள் பிரியதர்ஷினி
ஆண்டாள் பிரியதர்ஷினி
மதுரை உள்ளிட்ட தெற்குப் பகுதி கலாசாரத்தையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தணும்னு நிறைய நிகழ்ச்சிகளை பண்ணினோம். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளும் எங்களைக் கவனிக்கத் தொடங்கினாங்க.
ஆண்டாள் பிரியதர்ஷினி

புரோகிராம் என்ஜினீயர்கள், மூன்று கேமரா மேன்கள், இரண்டு எடிட்டர்கள் என 20 பேர் இந்த அலுவலகத்தில் உள்ளனர். கீழ்த்தளத்தில் பிரமாண்டமான ஸ்டூடியோ, அதிநவீனத் தொழில்நுட்பக் கருவிகள் எல்லாம் அப்படியே கிடக்கின்றன. ஆண்டாள் பிரியதர்ஷினி இந்த கேந்திரத்தின் தலைவராக இருந்தபோது, அதாவது 2015, 2016-ம் ஆண்டுகளில் மதுரை கேந்திரத்திலிருந்து ஏராளமான நிகழ்ச்சிகள், சென்னை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

"தலைமை மாற்றத்தால்தான் இந்தச் சுணக்கமா?"என்ற கேள்வியோடு ஆண்டாள் பிரியதர்ஷினியைத் தொடர்புகொண்டு பேசினோம். கவலைபொங்க பேசியவர், “மதுரை உள்ளிட்ட தெற்குப் பகுதி கலாசாரத்தையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தணும்னு நிறைய நிகழ்ச்சிகளை பண்ணினோம். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளும் எங்களைக் கவனிக்கத் தொடங்கினாங்க. அப்புறம், என்ன காரணத்தினாலோ என்னை புதுச்சேரிக்கு மாத்திட்டாங்க. புதுச்சேரி மிகவும் சிறிய பகுதிதான். ஆனா, தமிழகம் தன் மொழித்திறத்தாலும் கலைவளத்தாலும் பரந்து விரிந்தது. அதை ஆவணப்படுத்த தவறி வருகின்றன, இப்போ இருக்கிற தமிழகக் கேந்திரங்கள். இதனால் கலைஞர்களையும், வெகுமக்கள் ரசனையையும் பறிகொடுத்திட்டு வர்றதா உணருகிறேன்” என்றார்.

தூர்தர்ஷன் அலுவலகம் மதுரை
தூர்தர்ஷன் அலுவலகம் மதுரை
ஈ:ஜே.நந்தகுமார்

ஆண்டாள் பிரியதர்ஷினியைப் பற்றி நன்கு அறிந்த சில ஊழியர்கள் நம்மிடம், “நாங்க மதுரையில இருந்து நடத்திய ‘டி.எம்.எஸ் டைம்ஸ்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. விளம்பரதாரர்கள் வந்து நிரம்பினாங்க. ‘திருத்தங்கைகள்’ நிகழ்ச்சியோட டி.ஆர்.பி ரொம்பவே உயர்ந்துச்சு. இதெல்லாம் பொறுக்காத டெல்லி தூர்தர்ஷன் நிர்வாகம், ஆண்டாள் பிரியதர்ஷினியை பணியிட மாற்றம் செய்துவிட்டு, வசுமதியை நியமித்தது. மேலிடத்து உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள பொதிகை கேந்திரங்களைச் செயல்பட விடாமல் முடக்கி வச்சிருக்காங்க, வசுமதி” என்று புகார் கூறுகின்றனர். புகார்கள் குறித்து வசுமதியைத் தொடர்புகொண்டோம். சரிவர பதிலளிக்காமல் இணைப்பைத் துண்டித்தார். அவர் தரப்பு விளக்கம் அளித்தால் அதைப் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைக்காட்சி போன்ற லாபநோக்கற்ற மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கக்கூடிய இதுபோன்ற நிறுவனங்களை மூடுவதற்கு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பொதிகை தொலைக்காட்சியின் மதுரை மற்றும் கோவை கேந்திரங்களை மூடுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே உத்தரவுகள் சென்றுள்ளதாகத் தெரிவிக்கிறார் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ``பத்து நாள்களுக்கு முன்பே மதுரை தொலைக்காட்சி சம்பந்தமாக, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறைக்கு மனுக்கள் அனுப்பியிருந்தோம். சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் சந்தித்து வருகிறோம். எனவே, இந்தக் கேந்திரங்களை மூடவிடாமல் காப்போம்" என உறுதிபடத் தெரிவித்தார்.

கேந்திர ஊழியர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலைஞர்களும் கேட்பதெல்லாம், ‘காழ்ப்புகள் ஏதுமின்றி இயங்குகிற தலைவர் ஒருவரை, அந்தந்தக் கேந்திரங்களுக்குத் தனித்தனியே நியமிக்க வேண்டும். மீண்டும் பழையபடி பொதிகைத் தென்றல் வீசவேண்டும்’ என்பதுதான்.