Published:Updated:

குமரி: `மரணத்துக்குக் காரணம் கொரோனா; சான்றிதழ் கேட்கும் குடும்பத்தினர்!’ - தீர்வுகாண ஆட்சியர் உறுதி

கலெக்டர் அரவிந்த்
கலெக்டர் அரவிந்த்

`கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சில பிரச்னைகள் இருந்துவருகின்றன. அரசின் உதவித்தொகை பெறுவதற்காக கொரோனாவால் இறந்தவர்களுக்கான மருத்துவச் சான்று தேவை என்பதால் பலர் கேட்கிறார்கள்.’

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. அதில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளர் பிரின்ஸ் பயாஸ் பேசுகையில், "முதல் அலையில் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் நடுத்தர வயதுடையவர்கள் மரணமடைந்துள்ளனர். இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால்தான் அதிகமான மரணங்கள் ஏற்பட்டன. காய்ச்சல் வந்தால் டெஸ்ட் செய்யச் சொல்வார்கள் என மெடிக்கல் ஸ்டோர், செவிலியர்கள் ஆகியோரிடம் மருந்து வாங்குகிறார்கள். அதற்குள் பத்து நாள்கள் ஆகிவிடும். அதன் பிறகு சீரியஸ் ஆகும்போது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அந்தச் சமயத்தில் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களைக் காப்பாற்றுவது கஷ்டமாகிவிடும்.

கொரோனா முன்களப் பணியாளர்கள்
கொரோனா முன்களப் பணியாளர்கள்

இரண்டாம் அலையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியவர்கள் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளை வெளியில், பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. குழந்தைகளை இரண்டுமுறை குளிக்கச் செய்ய வேண்டும். சானிடைஸர் பயன்பாடு பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் வெளியே சென்றுவிட்டு வந்தால், உடனே குழந்தைகள் அருகில் செல்லக் கூடாது. யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களைத் தனியாக உட்காரவைக்க வேண்டும்" என்றார்.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரகலாதன் பேசுகையில், "கொரோனா முதல் அலையின் ஆரம்பகட்டத்தில் ஒருவர் எத்தனை பேருக்கு இந்த வைரஸைப் பரப்புவார் என ஆய்வு செய்யப்பட்டது. சாதாரணக் காய்ச்சல் 1.6 பேருக்கு பரவும். ஆனால் கோவிட் 2.6 பேருக்குப் பரவும். இந்தப் பரவல் எட்டு ஸ்டெப் போன பிறகு பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும். நூறு பேருக்கு கொரோனா வந்தால் அவர்களில் 15 பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும், இரண்டு பேருக்கு வென்டிலேட்டர் தேவைப்படும். அவர்களில் ஒருவர் இறந்துபோகலாம். எனவே, இறப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். தடுப்பூசி போட்டால் கொரோனா வந்தாலும், 99 சதவிகிதம் மரணம் தடுக்கப்படும்" என்றார்.

கலெக்டர் தலைமையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு கலந்துரையாடல்
கலெக்டர் தலைமையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு கலந்துரையாடல்

மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி பேசுகையில், "கொரோனோ தொடர்பாக எந்த ஒரு புகார் வந்தாலும், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் உரிய பதில் வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை, பெட் தேவை, வேறு வார்டுக்கு மாற்ற வேணடும் போன்ற எந்தப் புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.

மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக நோய்த்தன்மை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. தற்போது கிராமப் பகுதிகளில் அதிக அளவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்துவருகின்றன. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. தடுப்பூசி போடும் டோக்கன் வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.

குமரி: ஒரே நாளில் 7 அடி உயர்ந்த அணை; குளங்கள் உடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

எனவே, தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்காக புதிய செயலியை அறிமுகப்படுத்த ஆலோசித்துவருகிறோம். இது விரைவில் நடைமுறைக்கு வரும். நோய்த் தொற்றால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் குறிப்பிட மாட்டார்கள். கொரோனா தொற்று காரணமாக உயிர் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சில பிரச்னைகள் இருந்துவருகின்றன. அரசின் உதவித்தொகை பெறுவதற்காக கொரோனாவால் இறந்தவர்களுக்கான மருத்துவச் சான்று தேவை என்பதால் பலர் கேட்கிறார்கள். மருத்துவச் சான்றிதழ் தொடர்பாக இதுவரை 150 புகார் மனுக்கள் வந்துள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்ட சிலர் கொரோனா தொற்று முடிந்த பிறகு, தொற்று காரணமாக ஏற்பட்ட வேறு நோய்களால் மரணிக்கின்றனர். எனவே அரசின் விதிமுறைப்படி இறப்புக்கான காரணம் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு