Published:Updated:

`கொரோனா அச்சத்தால் கைவிட்ட உறவினர்கள்; ஒதுங்கிய மக்கள்!' - முதியவர் உடலை அடக்கம் செய்த போலீஸார்

போலீஸ்
போலீஸ்

கொரோனா அச்சத்தால் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்களும், ஊர்மக்களும் முன்வராத நிலையில், தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட போலீஸ்.

உலகம் முழுவதும் கடும் அச்சத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர் மக்கள். கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தியிருக்கும் மத்திய அரசு, ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. திருமணம், இறுதிச் சடங்கு போன்றவற்றில் மிகக் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும், விரைவாக நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இது ஒருபுறமிருக்க, ஒருவருக்கு சாதாரண காய்ச்சல், இருமல் வந்தால்கூட அது கொரோனா நோயாக இருக்குமோ என்று அவருக்கு அருகே செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். அந்த வகையில் மதுப்பழக்கத்தால் உடல்நலமின்றி உயிரிழந்த ஒருவரை அடக்கம் செய்ய ஊர் மக்கள் முன்வராததால் போலீஸாரே அடக்கம் செய்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகேயிருக்கும் சிறுணாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை, வயது 62. இவருக்கு 4 மகன்கள். இவரின் மனைவியும், மூத்த மகனும் ஏற்கெனவே இறந்துவிட மற்ற 3 மகன்களுடன் தனக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதில் இரண்டாவது மகன் மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது. மற்ற இருவரும் சிறுவர்கள்.

உயிரிழந்த சோலையின் உடல்
உயிரிழந்த சோலையின் உடல்

செய்யாறில் வாட்ச்மேனாக வேலை பார்த்த இவருக்கு அளவுக்கதிகமான மதுப்பழக்கமும் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. அதனால் கடந்த 7 மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பியவருக்கு உடல்நிலை மோசமாகியிருக்கிறது.

தொடர்ச்சியாக இருமலால் பாதிக்கப்பட்டவர், கடந்த 28-ம் தேதி உயிரிழந்திருக்கிறார். இதனால் கதறியழுத அவரது பிள்ளைகள், அப்பா இறந்துவிட்டார் என்று அக்கம்பக்கத்தினரிடமும் அதே தெருவிலுள்ள உறவினர்களிடமும் கூறி அழுதிருக்கிறார்கள். ஆனால் சோலை, கொரோனா நோய் வந்து இறந்திருக்கலாம் என்று நினைத்ததால், அவர்கள் யாரும் அருகே செல்லாததுடன், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

சோலையின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போலீஸ்
சோலையின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போலீஸ்

உடனே அங்கு விரைந்த அனந்தபுரம் போலீஸார் சோலையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாகவே சோலை உயிரிழந்திருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய மீண்டும் சிறுணாம்பூண்டிக்கு எடுத்துச் சென்றனர் போலீஸார்.

இன்ஸ்பெக்டர் ஜீவராஜ மணிகண்டன்
இன்ஸ்பெக்டர் ஜீவராஜ மணிகண்டன்

சோலை உயிரிழந்த காரணத்தைக் கூறியும் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்களும் ஊர் மக்களும் முன்வரவில்லை. அதனால் போலீஸாரே தங்களது செலவில் சோலையின் உடலை எளிமையான முறையில் நல்லடக்கம் செய்து முடித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அனந்தபுரம், கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டனிடம் பேசினோம். ``இறந்துபோன சோலை மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். செய்யாறில் வாட்ச்மேனா வேலை பார்த்துத்தான் தன் மகன்களை வளர்த்திருக்கிறார். அன்றாடம் மது குடிக்கும் பழக்கமுள்ள அவருக்கு புகைபிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. கடந்த 7 மாசமாவே அவர் உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்திருக்கிறார். தொடர்ச்சியான புகைப் பழக்கத்தினால் இறப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு இருமிக்கொண்டே இருந்திருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி
சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி

அதனால் அவருக்கு கொரோனா நோயாக இருக்கும் என்று நினைத்து உதவி செய்ய யாரும் செல்லவில்லை. இறந்தபிறகும் கூட அருகே வருவதற்குப் பயந்தார்கள். சோலையின் மகன்களில் இருவர் சிறுவர்கள், மற்றொருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர்களால் என்ன செய்ய முடியும்.

ரத்தமும், சதையுமாக நம்முடன் வாழ்ந்த ஒருவரை அப்படியே விட்டுவிட்டு வர முடியுமா.. அதனால் நானும் எங்கள் எஸ்.ஐ நரசிம்ம ஜோதி, சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் சேர்ந்து எங்களிடம் இருந்த பணத்தைப் போட்டு சோலையின் உடலை அடக்கம் செய்தோம்.

பிரேதப் பரிசோதனையில் நெஞ்சுவலி காரணமாகத்தான் சோலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அரசின் உத்தரவுப்படி நுரையீரல் பகுதியை மட்டும் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தவில்லை. அதேசமயம் இதயப் பகுதி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு