Published:Updated:

`3 குழந்தைகள் 20 நாள்களாக மாயம்; போலீஸ் ரேடாரில் தந்தை; கலக்கத்தில் உறவினர்கள்!’- அரியலூர் அதிர்ச்சி

குழந்தைகளின் தந்தை பச்சைமுத்து
குழந்தைகளின் தந்தை பச்சைமுத்து

குழந்தைகளை விற்றுவிட்டதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். `மூன்று பிள்ளைகளை இப்படி தொலைத்து விட்டு வந்துவிட்டாயே என்ன செய்தாய் குழந்தைகளை?’ எனக் கேட்டு வயதான பெண்கள் சிலர் அழுதுள்ளனர்.

அரியலூர் அருகே தந்தை ஒருவரே தன்னுடைய மூன்று குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றதுடன், குழந்தைகள் காணாமல்போனதற்குக் காரணமாக இருந்துள்ளார். மேலும், உறவினர்களிடம் தன்னுடைய குழந்தைகளை விற்றுவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது அந்தக் குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் சிலர் தவித்து வருவதுடன் போலீஸார் உடனே குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

குழுமூர் கிராமம்
குழுமூர் கிராமம்

அரியலூர் மாவட்டம் குழுமூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு விஜய், பவானி, அரவிந்த் என 10 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர். பச்சைமுத்து இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாலா விழுப்புரத்தில் உள்ள அவருடைய அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாத்ம் 20ம் தேதி பச்சைமுத்து தன்னுடைய மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர், அடுத்த நாள் தான் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். ஆனால் அவருடன் சென்ற மூன்று குழந்தைகள் வரவில்லை. இதையடுத்து அருகில் இருந்த உறவினர்கள் பச்சைமுத்துவிடம், பிள்ளைகள் எங்கே எனக் கேட்க அரியலூர் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வந்து விட்டதாக எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் கூறியதாகச் சொல்கிறார்கள்.

`ஆண் குழந்தை; ஜோசியம்; போட்டுக்கொடுத்த தோழி!'- திருச்சிக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தை விற்பனை

அதன் பிறகு அவரிடம் சற்று அழுத்தம் கொடுத்து கேட்க குழந்தைகளை விற்றுவிட்டதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். `மூன்று பிள்ளைகளை இப்படி தொலைத்து விட்டு வந்துவிட்டாயே? என்ன செய்தாய் குழந்தைகளை?’ எனக் கேட்டு வயதான பெண்கள் சிலர் அழுதுள்ளனர். இதையடுத்து குழுமூரைச் சேர்ந்த சிலர் இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்க, போலீஸார் வந்து பச்சைமுத்துவை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால் அங்கேயும் முன்னர் சொன்னதை அப்படியே கூறியுள்ளார். இந்தநிலையில் மூன்று குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இதுகுறித்து உறவினர்கள் சிலரிடம் விசாரித்தோம். ``மூன்று குழந்தைகள் காணாமல் போய் கிட்டத்தட்ட 20 நாள்கள் ஆகப் போகிறது. ஆனால், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதியாமல் ஏனோ,தானோ என விசாரித்து வருகின்றனர். பிள்ளைகள் எந்த ஊரில் எப்படி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் எங்களாலும் குழந்தைகளைத் தேடி வெளியே செல்லமுடியவில்லை. எனவே, விபரீதம் நிகழ்வதற்குள் அந்த மூன்று குழந்தைகளையும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றனர் வேதனையுடன்.

குழந்தை பெற்றோரிடம் கதை  கேட்பதும், வீடியோ பார்ப்பதும் ஒன்றா?! ஓர் அலசல்

இதுகுறித்து செந்துறை போலீஸாரிடம் பேசினோம். ``குழந்தைகள் காணாமல்போனது குறித்து பச்சைமுத்துவிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். குழந்தைகளை விற்கும் அளவிற்குக் குடும்பப் பொருளாதாரம் இல்லை. வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. விழுப்புரத்தில் உள்ள அவர் மனைவியிடம் விசாரிக்க இருக்கிறோம். அதன்பிறகுதான் என்ன பிரச்னை. குழந்தைகளை எங்கு விட்டுள்ளார் அல்லது ஏதேனும் நாடகம் ஆடுகிறாரா என்பது தெரியவரும்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு