Published:Updated:

`வேலைவாய்ப்பில் முன்னுரிமை’ - அசத்தும் ஹரியானா; எதிர்பார்க்கும் தமிழகம்

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் ஹரியானா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாகக் கிடைக்க, உள் ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடும் இச்சட்ட வரைவில் செய்யப்பட்டிருக்கிறது.

தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை:

பிழைப்பு தேடி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழ்நாட்டு தொழிலாளர்கள், பலவிதமான நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக, கொரோனா ஊரடங்கால், இவர்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இதனை தவிர்க்க தமிழ்நாட்டில் இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென, தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட இயக்கங்கள் வலியுறுத்தி வருகிறது.

இதற்கு வழிகாட்டும் விதமாக, தற்போது, ஹரியானா மாநில அரசு, தங்களது மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வழங்குவதற்கான அவசர சட்டம் இயற்ற, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இப்பொழுதாவது விழித்துக்கொள்ள வேண்டும்... இங்கும் அதுபோல் உடனடியாக சட்டம் இயற்றம் வேண்டுமென வலியுறுத்துகிறார், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.

வெளிமாநிலங்களில் தவித்த தமிழக தொழிலாளர்கள்
வெளிமாநிலங்களில் தவித்த தமிழக தொழிலாளர்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய இவர், ``ஹரியானா மக்களுக்கு அங்குள்ள தனியார் நிறுவனங்களில் 75 % வேலை வழங்குவதற்கான அவசரச் சட்டம் இயற்ற, அம்மாநில முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உள்ளூர் மக்களுக்கான இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் ஹரியானா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாகக் கிடைக்க, உள் ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடும் இச்சட்ட வரைவில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அவசரச் சட்ட வரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கி. வெங்கட்ராமன்
கி. வெங்கட்ராமன்

ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத்துறை வேலைவாய்ப்பிலும் தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 % வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசில் 100-க்கு 100 வேலை வாய்ப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் 2018 பிப்ரவரி 3 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது. இதற்கான மாதிரி வரைவுச் சட்டத்தை, பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 11.02.2018 அன்று நேரில் வழங்கினார். இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கையை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின.

தமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல், ஹரியானாவைப் போல் சட்டம் இயற்ற வேண்டும். தற்போது வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டு நிறுவனங்களின் முறைசாரா வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க, “தமிழ்நாடு அமைப்புசாரா வேலை வழங்கும் வாரியம் அமைக்க வேண்டும். இதற்கான அவசர சட்டமும் இயற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

`ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், கலைஞர்கள்!’ -உதவிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம்
அடுத்த கட்டுரைக்கு