Published:Updated:

70 அடி ஆழத்தில் குழந்தை!- மீட்புப் பணியில் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு #prayforsurjith

நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள். நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து 17 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணி நீடித்துவருகிறது. மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை வெங்கடேஷ் குழுவினர் உள்ளிட்டோர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரோடு இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், சென்னையைச் சேர்ந்த அன்பறிவ் குழுவினரும் மீட்புக் குழுவோடு இணைந்திருக்கிறார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

கயிறு மூலம் கட்டி குழந்தையை மீட்கும் பணியின்போது எதிர்பாராதவிதாகக் கயிறு நழுவியது. இதனால், குழந்தை மேலும் ஆழத்துக்குச் சென்று 70 அடியில் சிக்கியிருக்கிறது. குழந்தையை கேமரா உதவியுடன் கொக்கி போன்ற கம்பிமூலம் வெளியே எடுக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து ஈடுபட்டுவருகிறார்கள். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது உணவு, தண்ணீரில்லாமல் கிட்டத்தட்ட 72 மணிநேரத்துக்கு மேல் சிக்கித்தவித்தவர்களை நாம் உயிரோடு மீட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். முதல்வர் தகவல் கொடுத்ததை அடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்'' என்றார்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

இன்று காலை, மதுரை மணிகண்டன் மற்றும் திருச்சி டேனியல் ஆகியோரது குழுக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரோபோ உதவியுடன் அவர்கள் முயற்சிசெய்தனர். ஏறக்குறைய அரை மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த அன்பறிவ் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து, மணிகண்டன் மற்றும் டேனியல் குழுவினர் இணைந்து புதிய உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். காலை 5 மணிக்குப் பிறகு, குழந்தையிடமிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை என்கிறார்கள். இருப்பினும் குழந்தையைப் பத்திரமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மீட்புப் பணி தொடர்கிறது.

4 நாள், 60 மணி நேரம், பல அடிகள்! - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்
மீட்புப் பணி
மீட்புப் பணி

இதனிடையே சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் வந்தனர். அவர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் மீட்புப் பணி குறித்து ஆலோசனை நடத்தினர். அவர்கள் வந்த சிறிதுநேரத்தில் வாகனங்களில் பிரத்யேக கருவிகள், கேமரா வசதியுடன் கூடிய கண்காணிப்புக் கருவிகளுடன் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்தனர். இரண்டு குழுவினரும் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அரக்கோணத்தில் இருந்து ஆர்.சி.ஓலா தலைமையிலான 33 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன உபகரணங்களுடன் குழியில் கயிறை இறக்கி குழந்தையை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல், எஸ்.ஐ பிரேம் ஆனந்தம் தலைமையில் 23 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் அவர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் இணைந்திருக்கிறார்கள்.

`கொஞ்சம் பொறுத்துக்கொள் மகனே!' - சுர்ஜித்துக்காக பிரார்த்தனையை முன்னெடுக்கும் மக்கள் #prayforsurjith

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``மீட்புப் பணியில் 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தன்னார்வத்துடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருமே, மீட்புப் பணியில் அனுபவம் வாய்ந்தவர்கள்தான். குழந்தையை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்துவந்தோம். அந்த முயற்சிகள் பலனளிக்காத பட்சத்தில், பேரிடர் மீட்புக் குழுவுக்குத் தகவல் கொடுத்தோம்'' என்றார்.