Published:Updated:

`இழுபறியான பிரச்னையில் முக்கிய முடிவு!’ - மீண்டும் தொடங்குகிறது வேலூர் விமான நிலையப் பணிகள்

விமானம்
விமானம்

முடக்கிவைக்கப்பட்டிருந்த வேலூர் விமான நிலையப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மக்கள் பயன்படுத்தும் சாலையைக் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட இழுபறியான பிரச்னைக்கு 4 தரப்பு அதிகாரிகள் கூடி பேசி முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில், வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு பராமரிப்பில்லாமல் கைவிடப்பட்ட வேலூர் விமான நிலையத்தை, `உதான்’ திட்டத்தின்கீழ் 120 ஏக்கரில் விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு மையம், ரேடார் கருவி அமைக்கும் இடம், சரக்கு முனையம் உட்பட பல்வேறு கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

டெர்மினல் கட்டடம்
டெர்மினல் கட்டடம்

முதற்கட்டமாக, சென்னை - வேலூர் - பெங்களூரு இடையே சிறிய ரக விமானங்களை இயக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டமும் நடந்தது. தொடர்ந்து, `2020, ஜனவரி முதல் வேலூரில் விமானங்கள் இயக்கப்படும்’ என்று அதிகாரிகள் அறிவித்தனர். பணிகள் துரிதமாக நடைபெற்றுவந்த நிலையில், திடீரென நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

டெர்மினல் கட்டடம் மற்றும் ஓடுதளப் பாதைக்கு இடையில் மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மக்கள் உபயோகப்படுத்தக்கூடிய அப்துல்லாபுரம் - ஆலங்காயம் சாலை உள்ளது. பொய்கைபுதூர், நரசிங்கபுரம், நாட்டார்மங்கலம், ஊசூர், ஒடுகத்தூர் உட்பட பல கிராம மக்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்திவருகிறார்கள்.

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலை
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலை

இதில் அரை கிலோமீட்டர் சாலையைக் கையகப்படுத்தி மாற்றுப்பாதை வழங்குவதில் பிரச்னை உள்ளது. அதனாலேயே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கடந்த 1.2.2020 அன்று வெளிவந்த `ஜூனியர் விகடன்’ இதழில் ‘`விண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்? வேலைகள் முடக்கம்... மக்கள் கலக்கம்' என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், சாலையின் ஒரு பகுதியை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கவும், அதற்கு மாற்றுச் சாலை அமைப்பது தொடர்பாகவும் நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறை முதன்மைச் செயலர், நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர், வேலூர் மாவட்ட வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஓடுதள பாதைக்கு செல்லும் நுழைவு வாயில்
ஓடுதள பாதைக்கு செல்லும் நுழைவு வாயில்

கூட்டத்தில், சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்து அருகிலேயே ரூ.1.7 கோடியில் மாற்று சாலை அமைக்க ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. `விரைவில் வேலூர் விமானமும் விண்ணைத் தாண்டும்’ என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

பின் செல்ல