Published:Updated:

`பசியால் துடிப்பது என்னைத் தூங்கவிடல!' -செருப்பு தைக்கும் தொழிலாளிகளை நெகிழவைத்த உதவி ஆய்வாளர்

மக்களுக்கு உதவும் அண்ணாவி
மக்களுக்கு உதவும் அண்ணாவி ( நா.ராஜமுருகன் )

`பல வீடுகளில் உள்ள குழந்தைகள் பசியால் துடிப்பதாகத் தகவல் வந்ததும், எனக்கு தூக்கம் இல்லை. நான் 37 வருஷம் காவல்துறையில் இருந்து, நேர்மையை மட்டுமே சம்பாதித்தேன். பெருசா பணத்தை சம்பாதிக்கலை. இருந்தாலும், என் சக்திக்கு முடிஞ்ச அளவு அந்த 30 குடும்பங்களுக்கும் உதவ நினைச்சேன்'.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்த 30 செருப்பு தைப்பவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான காய்கறிகள், அரிசியை வழங்கி, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார், ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர்.

மக்களுக்கு உதவும் அண்ணாவி
மக்களுக்கு உதவும் அண்ணாவி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, தே.இடையப்பட்டி. கரூர் மாவட்டத்தின் கடைக்கோடி தென் எல்லையில் இருக்கும் இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் மிகவும் பின்தங்கியவர்கள். பெரிதாக வருமானம் இல்லாதவர்கள். தினமும் கூலி வேலைக்குப் போய், அதில் கிடைத்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிவந்தவர்கள்.

`ஊரடங்கு உத்தரவு; கிராம மக்களுக்கு 1 கிலோ காய்கறி!' - நெகிழ வைத்த கரூர் இளைஞர்

இந்தக் கிராமத்தில் இன்னும் அல்லல்படும் 30 செருப்பு தைப்பவர்களின் குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவர்கள், கரூர் முழுக்க பயணித்து, செருப்பு தைக்கும் வேலைபார்த்து, அந்த வருமானத்தில் வாழ்ந்துவந்தார்கள். ஆனால், கடந்த மாதம் 24-ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அவர்களின் தொழில் முற்றிலும் முடங்கிப்போனது.

மக்களுக்கு உதவும் அண்ணாவி
மக்களுக்கு உதவும் அண்ணாவி
நா.ராஜமுருகன்

தொழில் நடக்கும் காலத்திலேயே பெரிதாக வருமானம் இல்லாமல் தவித்த அவர்களின் நிலை, இந்த ஊரடங்கு உத்தரவால் இன்னும் மோசமானது. மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சிரமப்பட்டுப்போனார்கள். இந்தச் சூழலில்தான், இவர்களின் நிலைமையைக் கேள்விப்பட்ட, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் அண்ணாவி என்பவர், அந்த 30 குடும்பங்களுக்கும் தேவையான 15 நாள்களுக்குரிய அரசி, காய்கறி, மளிகைச் சாமான்களைத் தனது சொந்தச் செலவில் வழங்கி, அவர்களை நெகிழச்செய்திருக்கிறார்.

அண்ணாவியிடம் பேசினோம். "எங்க கிராமமே மிகவும் வறட்சியான கிராமம். இங்குள்ள பெரும்பாலானோர் கூலி வேலை, விறகு வெட்டுற வேலைக்குப் போய்தான், சாப்பாட்டுப் பிரச்னையை சமாளித்து வந்தார்கள். ஆனால், அவர்களைவிட இந்த 30 குடும்பங்களும் செருப்பு தைக்கிற வேலைக்குப் போக முடியாம, வருமானத்துக்கும் வழியில்லாம அல்லாடிப் போனாங்க. அதில் பல குடும்பங்கள் ஒரு வாரமா பட்டினியாகக் கிட்டபதாக நண்பர் ஒருவர் மூலம் தகவல் வந்தது. அதில் பல வீடுகளில் உள்ள குழந்தைகள், பசியால் துடிப்பதாகவும் தகவல் வந்ததும், எனக்கு தூக்கம் இல்லை. நான் 37 வருஷம் காவல்துறையில் இருந்து, நேர்மையை மட்டுமே சம்பாதித்தேன். பெருசா பணத்தை சம்பாதிக்கலை. இருந்தாலும், என் சக்திக்கு முடிஞ்ச அளவு அந்த 30 குடும்பங்களுக்கும் உதவ நினைச்சேன்.

மக்களுக்கு உதவும் அண்ணாவி
மக்களுக்கு உதவும் அண்ணாவி
நா.ராஜமுருகன்

அந்தக் குடும்பங்களுக்கு 15 நாள்களுக்குத் தேவையான அரசி, காய்கறிகளை வாங்கி, வழங்கினேன். இதனால் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி வந்தது. இதோட விடப்போறதில்லை. வயல்ல விளைஞ்ச நெல் மூட்டைகள் எங்க வீட்டுல கொஞ்சம் இருக்கு. அதை அரைச்சு, அவர்களுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்தப்போறேன். பிறக்கும்போது நாம என்ன கொண்டுவந்தோம், போறப்ப என்னத்த கட்டிக்கொண்டு போகப்போறோம். மனுஷனுக்கு மனுஷன் இதுபோல் இக்கட்டான சூழலில் முடிஞ்ச அளவு உதவணும் சார். இல்லைனா, நாம மனுஷனே இல்லை" என்று கூறி, நம்மையும் நெகிழவைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு