Published:Updated:

சசிகலா ரிலீஸ், ஜெய் பீம் சர்ச்சை முதல் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் வரை..! - 2021 Rewind

2021 Rewind
News
2021 Rewind

தமிழ்நாட்டில் இந்தாண்டு நடந்த முக்கியமான நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் தொகுப்பு..!

சசிகலா விடுதலை!

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடைந்ததை அடுத்து, ஜனவரி-27 அன்று சசிகலா விக்டோரியா மருத்துவமனையிலிருந்தபடியே விடுதலை செய்யப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்துக் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. சசிகலாவுக்குச் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறைக்கு வந்து சரண் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 3 பேரும் அதே சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா
சசிகலா

சிறையில் அவருக்கும், இளவரசிக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை காலம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைய இருந்தது. ஆனால் ஏற்கெனவே அவர் சிறையிலிருந்த நாள்களைக் கணக்கிட்டு, சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விடுதலை தினத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த சசிகலாவுக்கு திடீரென ஜனவரி 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், சிறைத் தண்டனையின் கடைசி நாளான ஜனவரி-27 அன்று சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடி!

23.02.2021 அன்று தமிழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை அப்போதைய மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தின் கடன் அளவு மார்ச் 2021 நிலவரப்படி 4,85,502.54 கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருப்பதாக, தமிழகத்தின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது நிதிநிலை உரையில் குறிப்பிட்டார். அதே போல அடுத்த மார்ச் 2022-ம் ஆண்டில் தமிழகத்தின் கடன் 5,70,189.29 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தார். அவர் நிதி நிலை அறிக்கையை வாசிக்கச் சபாநாயகர் அழைத்தவுடன், தி.மு.க-வின் துரைமுருகன் எழுந்து தங்களைப் பேச அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். ஆனால், சபாநாயகர் அதை ஏற்கவில்லை.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

``உங்களுக்கு மைக் கொடுக்க முடியாது. பேச வேண்டியதைப் பேசிவிட்டுக் கிளம்புங்கள்" என்று பதிலளித்தார். இதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்புச் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா!

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் கால்நடைப் பூங்கா ஒன்றைத் தொடங்க அடிக்கல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 1,102 ஏக்கர் பரப்பளவில், மொத்தம் 1,022 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசியாவின் மிகப் பெரிய கால்நடைப் பூங்காவாக இது செயல்படவிருக்கிறது. இதற்கான தொடக்க விழா கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற்றது.

கால்நடைப் பூங்கா
கால்நடைப் பூங்கா

பாக்டீரியாவுக்குத் தமிழக பேராசிரியர் பெயர்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாவுக்குத் தமிழக விஞ்ஞானியின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நாசாவுடன் இணைந்து ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில், கண்டறியப்பட்ட Methylobacteriaceae வகையைச் சேர்ந்தது பாக்டீரியாவுக்கு, methylobacterium ajmalii சையத்து அஜ்மல் கான் என்னும் விஞ்ஞானியின் பெயர் வைக்கப்பட்டது. சையத்து அஜ்மல் கான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகமும்... ஆன்லைன் தேர்வும்!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பயிலும் மாணவர்களுக்குப் பருவத் தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவித்து சான்றிதழ் வழங்கும் பணிகளைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் மார்ச் 2-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதியாண்டு பயிலும் பொறியியல் மாணவர்கள் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

ஆன்லைன் மூலம் தேர்வெழுதும் மாணவர்களைக் கண்காணிப்பதற்காகப் பிரத்தியேக தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆன்லைன் வாயிலாகத் தேர்வெழுதும் போது பல்வேறு பிரச்னைகள் எழுவதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டிருந்தது. இவற்றை விரைவாகச் சரிசெய்வதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டன. அதில், தற்போதைய பாடத்திட்டம் மற்றும் அரியர் பாடங்களுக்குத் தேர்வெழுதியவர்களில் 70 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்தது. வெறும் 30 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் பொறியியல் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் 2020 நவம்பர்/டிசம்பர் மாதங்களில் மறுதேர்வையும் , ஏப்ரல்/மே 202-ல் இறுதி பருவத் தேர்வுகளை அனைத்து பருவங்களுக்கும் திறந்த புத்தக வகை வடிவத்தில் நடத்தியது. அதில் மாணவர்கள் தங்கள் புத்தகத்திலும், இணையத்திலும் பார்த்து எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.

கரிசல் இலக்கிய தந்தை கி.ரா காலமானார்!

கடந்த மே மாதம் 17-ம் தேதி, கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் 99 வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். "கோபல்ல கிராமம்", "கோபாலபுரத்து மக்கள்" உள்ளிட்ட எண்ணற்ற படைப்புகளைப் படைத்த இவர், கரிசல் இலக்கிய தந்தை என அனைவராலும் அழைக்கப்பட்டார். அவரின் இழப்பு தமிழுக்கு ஏற்பட்ட இழப்பாகப் பார்க்கப்பட்டது. அவரின் இறுதிச்சடங்கு இடைசெவலில் நடைபெற்றது. பின்னர், உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் முதல் தமிழ் எழுத்தாளர் ஆனார் கி.ரா!

கி.ரா
கி.ரா

கொரோனாவுக்கு கோயில்!

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரின் இருகூர் பகுதியில் கடந்த மே மாதம் காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலையை வழிப்பாட்டுக்கு நிறுவியிருந்தனர். அந்த சிலை 1.5 அடி உயரமுள்ள கறுப்பு கருங்கல் சிலையாகும். கோவை காமாட்சி புரி ஆதீனம் சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அமைச்சரவைக்கு புதிய பெயர்கள்!

புதிய அரசு அமைந்தவுடன் சில அமைச்சகங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. அவற்றைப் பார்க்கலாம்!

1) வேளாண்மைத் துறை - வேளாண்மை உழவர் நலத் துறை.

2) சுற்றுச்சூழல் துறை - சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை.

3) சுகாதாரத்துறை - மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை.

4) மீன்வளத்துறை - மீன்வளம் மீனவர் நலத்துறை

5) தொழிலாளர் நலத்துறை - தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை.

6) செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை - செய்தித் துறை

7) சமூகநலத் துறை - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை.

8) பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை - மனிதவள மேலாண்மைத் துறை.

9) வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.

10) நீர்வளத்துறை என்னும் அமைச்சகம் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிவசங்கர் பாபா, ராஜகோபாலன்
சிவசங்கர் பாபா, ராஜகோபாலன்

தமிழகத்தில் பாலியல் தொல்லை!

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிக முக்கியமான போக்சோ (POSCO) கைதுகளைப் பற்றிப் பார்ப்போம்!

1) Padma Seshadri Bala Bhavan:

(PSBB) பள்ளியில் ராஜகோபாலன் என்னும் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் வெறும் துண்டோடு இருப்பது போன்ற புகைப்படம் வரலானது. பின்னர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இந்த ஆசிரியர் தங்களிடமும் தவறான முறையில் நடந்துகொண்டார் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2) சென்னை மகரிஷி வித்யாலயா பள்ளியின் ஆசிரியர் ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

CM- ன் பொருளாதார குழு!

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுத் ஸ்டாலின் முதல்வரானார். அப்போது நடைபெற்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில் முதல்வருக்குப் பொருளாதார ஆலோசனைகள் வழங்க ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று அமையவிருக்கிறது எனத் தெரிவித்தார். Dr. ரகுராம் ராஜன், Dr. அரவிந்த் சுப்பிரமணியன், Dr. எஸ்தர் டஃப்லோ, Dr. ஜீன் டிரெஸ், Dr. நாராயண் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றனர்.

ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு
ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ்

ஏ.கே. ராஜன் குழு!

நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய்ந்து 165 பக்க அறிக்கையைச் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்தது. அதில் நீட் தேர்வு இருந்தால் மறு தேர்வாளர்கள் (Repeaters) அதிகம் வரலாம், கோச்சிங் சென்டர்ஸ் போன்ற பல பிரச்னைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சட்டரீதியாக இந்த பிரச்னையை அணுகலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தக் குழு பொது மக்களிடமும் கருத்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டிருந்தது. அதன்படி கிட்டத்தட்ட 86,000 பேர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். அதில் பெரும்பாலும் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்து தெரிவித்திருந்தனர்.

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழா!

ராஜராஜன் சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவரின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை வெளியிடப்பட்டது.

ராஜேந்திர சோழன்
ராஜேந்திர சோழன்

ரியல் பொடியன் குளம்!

கர்ணன் படத்தில் வரும் பொடியன் குளம் போல தமிழகத்தில் 75 வருடங்களாகப் பேருந்து போக்குவரத்தே இல்லாத ஊர் இன்றும் இருக்கிறது என்றால் நம்ப முடியுமா? ஆம், அந்த ஊர்ப் பெயர் தான் குவளை வேலி. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் முதன் முறையாகப் பேருந்து சேவை அந்த ஊருக்கு இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 - 3 கிலோமீட்டர் நடந்தே தங்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலை இருந்தது இப்போது அது தீர்ந்துவிட்டது.

அன்னைத் தமிழில் அர்ச்சனை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகாலமாகவே தமிழகத்தில் நிலவி வந்தது. இந்த நிலையில், ``அன்னைத் தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள 47 கோயில்களில் செயல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்புப் பலகையில் அர்ச்சகரின் பெயர், தொலைப்பேசி எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா

ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அத்துடன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப்படத்தைச் சட்டசபையில் திறந்து வைத்தார்.

சமூக நீதி நாள் அறிவிப்பு!

6.09.2021 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் 110 விதியின் கீழ் தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதியை சமூக நீதி நாளாக அறிவித்தார். அதன்படி அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது.

தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு நாள்!

தமிழ்நாடு எனப் பெயர் வைத்த ஜூலை மாதம் 18-ம் நாளை தமிழ்நாடு நாள் எனக் கொண்டாட அரசாணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இது பல விவாதங்களைக் கிளப்பியது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 அன்று சில பகுதிகள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை விட்டுப் பிரிந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டி23 புலி
டி23 புலி

டி-23 புலி பிடிபட்டது!

மசினகுடி வனப்பகுதியில் 4 மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற டி-23 என்னும் புலியை 21 நாள்களுக்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர் வனத்துறையினர். இதற்கிடையில் புலியைக் கொல்லக் கூடாதென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெய் பீம் சர்ச்சை!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதில் வரும் காலண்டர் அட்டை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பது போன்று உள்ளதாகக் கூறி பிரச்னை வெடித்தது. பின்னர் அது நீக்கப்பட்டது.

ஜெய் பீம்
ஜெய் பீம்

பாலியல் தொல்லை!

கோவை தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி

சிறப்பு உள் இட ஒதுக்கீடு ரத்து!

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு பிப்ரவரி 26-ம் தேதி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் வந்த தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், இந்த அறிவிப்பை வெறும் தேர்தல் அறிவிப்பு எனக்கூறி கேள்வி எழுப்பினர். முறையான சாதிவாரி கணக்கெடுப்பின்படி தான் இந்த மாதிரி அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனக் கூறி அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தனர். தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

வேளாண் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள்... தேர்வு எழுதியவர்களில் 90 சதவிகிதம் பேர் தோல்வி!

கடந்த 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டுகளில் மாணவர்களில், பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரியர் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வும், நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக் கழகம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்டது. அதில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 50 பேர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நினைவுக் கட்டடத்தின் முன் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆன்லைனில் தேர்வு நடத்திய போதே, அந்த செயலியில் நிறையத் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தன. இந்த தவற்றைச் சுட்டிக் காட்டிய போது அதனை நிர்வாகம் பரிசீலிக்காமல் விட்டுவிட்டனர் என மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

கழுவெளி ஈரநிலம், இனி பறவைகள் சரணாலயம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வானூர் வட்டத்தில் இடைப்பட்ட இடத்தில் அமைந்திருக்கிறது கழுவெளி ஈரநிலம். சுமார் 5,151.60 ஹெக்டர் அளவில் இந்த ஈரநிலம் அமைந்துள்ளது. இதனை தற்போது தமிழகத்தின் 16-வது பறவைகள் சரணாலயமாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

நெல்லையில் 3 மாணவர்கள் பலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி. மேலும் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அன்பழகன் (14 வயது), விஸ்வரஞ்சன் (13 வயது) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுதீஷ் (11 வயது) என்னும் மாணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மாணவர்கள் உயிரிழந்த பள்ளி
மாணவர்கள் உயிரிழந்த பள்ளி

சுவர் இடிந்து விழுந்ததற்கு அது அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டது தான் காரணம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளியின் தாளாளர் மற்றும் ஒப்பந்ததாரர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டின் மாநில பாடலாக `நீராருங் கடலுடுத்த' பாடல் அறிவிப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய `நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாட்டின் மாநில பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை அமைப்புகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் கட்டாயமாகத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட வேண்டும். பாடலானது 55 வினாடிகளில் பாடப்பட வேண்டும். பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.