Published:Updated:

`இந்த ரோடு யாருடைய கட்டுப்பாட்டில்?!' - தேனி காவலர்களைப் பதம்பார்க்கும் 15 வருட பழைய சாலை

சாலை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்ற குழப்பமும் உள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடா... வடபுதுப்பட்டிப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டதா... எனத் தெரியாமல் இருந்தது.

ஆயுதப்படைச் சாலை
ஆயுதப்படைச் சாலை

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்து கடந்த 1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, தேனி மாவட்டம் உதயமானது. கருவேலநாயக்கன்பட்டி அருகே 2001-ம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டன. கூடவே, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்புறம் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், ஆயுதப்படை வளாகம் கட்டப்பட்டது. சுமார் 350-க்கு மேற்பட்ட காவலர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

ஆயுதப்படைச் சாலை
ஆயுதப்படைச் சாலை
`6,000 காவலர்கள்; ஜி.எஸ்.டி, ஓ.எம்.ஆர் சாலைகள்!' - தமிழ்நாடு போலீஸின் மாஸ்டர் பிளான் #ModiXiSummit

இந்நிலையில், ஆயுதப்படை வளாகத்துக்குச் செல்லக்கூடிய சாலை படுமோசமான நிலையில் இருப்பதால், அடிக்கடி காவலர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஆயுதப்படைக் காவலர் ஒருவர், ``தினமும் ஏதாவது ஒரு இடத்துக்குப் பணிக்காக சென்றுவிட்டு, பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் ஆயுதப்படை வளாகத்துக்குத் திரும்புவோம். இந்தச் சாலையானது ஏற்றமாக இருக்கும். கூடவே, ஆங்காங்கு பள்ளமாக இருக்கும். இரவு நேரத்தில் அந்தப் பள்ளம் இருப்பது தெரியாது. இருசக்கர வாகனத்தில் வரும் பலரும் கீழே விழுந்துவிடுகிறார்கள். சிலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் இச்சாலையைப் பயன்படுத்தவே பயமாக இருக்கும். பெரிய விபத்து ஏற்படும் முன்னர், சாலையை சரி செய்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

ஆயுதப்படைச் சாலை
ஆயுதப்படைச் சாலை

ஆயுதப்படை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``சாலையைப் புதுப்பிக்க வேண்டும் எனப் பலமுறை கூறிவிட்டோம். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனாலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், இன்றுவரை சாலை போடவில்லை. சாலை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்ற குழப்பமும் உள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடா... வடபுதுப்பட்டிப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டதா... எனத் தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது வடபுதுப்பட்டிப் பஞ்சாயத்துக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. மோசமான சாலையால், காவலர்கள், மைதானத்தை ஒட்டியுள்ள மண் சாலையைப் பயன்படுத்துகின்றனர்” என்றார்.

`போராட்டத்தில் புல்லட் வெஸ்டை துளைத்த குண்டு’ - பர்ஸ்ஸால் மறுபிறவி எடுத்த உ.பி காவலர்!

வடபுதுப்பட்டி ஊராட்சி அலுவலரிடம் பேசியபோது, ``2003 -ம் ஆண்டு அந்தச் சாலையானது வடபுதுப்பட்டிப் பஞ்சாயத்து சார்பில் போடப்பட்டது. அதன் பிறகு, மாவட்ட காவல்துறையிடம் அச்சாலை ஒப்படைக்கப்பட்டது. அதனால், எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், கடந்த வருடம் ஜனவரி மாதம், அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி, அச்சாலையானது மீண்டும் வடபுதுப்பட்டிப் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

15 வருடங்களாக எந்தப் பராமரிப்பும் இல்லாமல், மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிட்ட சாலையை சீர்செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டு டெண்டர் விடும் பணியும் முடிந்துவிட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் பணி தொடங்கிவிடும்” என்றார்.