Published:Updated:

`பருவமழை சீரமைப்பு, கொஞ்சம் லேட்டாகிடுச்சு!' - முதல்வர் வருகையால் பளபளப்பாகும் தூத்துக்குடி சாலைகள்

தூத்துக்குடி சாலை
தூத்துக்குடி சாலை

தூத்துக்குடியில் நீண்ட காலமாக சரிசெய்யப்படாமல் இருந்த சாலைகள், தற்போது முதல்வர் வருகையையொட்டி சரி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மனுக்கள் அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், வருகிற 22-ம் தேதி, முதல்வரின் திருச்செந்தூர் வருகையையொட்டி அவசர அவசரமாக சாலைகள் சீரமைக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

முரசு தமிழப்பன்
முரசு தமிழப்பன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், ``தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக, திருச்செந்தூர் - ஆத்தூர் வரையிலான சாலை மிகவும் மோசமாகவே உள்ளது. எந்தவொரு அவசர சிகிச்சை என்றாலும் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குதான் கொண்டுசெல்ல வேண்டும். சாலைகள் மோசமாக உள்ளதால், விபத்துகள் மட்டுமின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளைக்கூட காப்பாற்ற முடிவதில்லை."

`பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம்!' -பேரவையில் அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

"சாலைகளைச் சரிசெய்ய வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் போராட்டம் நடத்தியும், எங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இப்போது, முதல்வர் வருவதையொட்டி சாலைகளை புதுப்பிப்பது என்பது மக்களை ஏமாற்றும் செயல். இந்தச் சாலைகளும்கூட தரமானதாக அமைக்கப்படவில்லை. பழுதடைந்த சாலைகளின் மேற்புறத்தில் தார் மட்டும் ஊற்றிவிடுகின்றனர். இன்னும் சில நாள்களில் சாலைகள் பழைய நிலைக்குச் சென்றுவிடும். இதனால் மக்களுடைய வரிப்பணம்தான் வீணாகும்" என்றார்.

தூத்துக்குடி சாலை
தூத்துக்குடி சாலை

முதல்வர் வருகையின் காரணமாகத்தான் சாலைகள் சீரமைக்கப்படுகிதா என்ற கேள்வியை திருச்செந்தூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரனிடம் வைத்தோம், ``ரோடு போடவே கூடாதா? பருவமழையின்போது சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதில் கொஞ்சம் காலதாமதமாகிவிட்டது. இப்போது சாலைகளைச் சீரமைத்துவருகிறோம். சாலைகள் சீரமைப்பும் முதல்வர் வருகையும் ஒன்றாக அமைந்துவிட்டது. முதல்வர் வருகையை முன்னிட்டு சாலைகள் சீரமைக்கப்படவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு