Published:Updated:

மகனுக்குக் கல்யாணம்... ஒரு மாத கால பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்ற இராபர்ட் பயஸ்!

இராபர்ட் பயஸ்
இராபர்ட் பயஸ்

``ஒரு மாசம் ரொம்ப சந்தோஷமா இருந்தான். ஆனாலும், காவல்துறை பாதுகாப்புடன் வெளியே இருந்தது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. முழுமையா விடுதலையாகி வெளியே வரணும்கிறதுதான் அவனோட ஆசை.’’

''என் மகன் 3 வயதுக் கைக்குழந்தையாக இருக்கும்போது நான் சிறைக்குச் சென்றேன். இப்போது அவனுக்கு 32 வயதாகிவிட்டது. இதுவரை, ஒரு தந்தையாக நான் அவனுக்கு எதுவுமே செய்ததில்லை. அவனுக்குத் திருமணம் செய்து வைப்பது மட்டுமே என்னால் முடிந்தது. அது என் கடமையும்கூட!’’ ஒரு மாத பரோல் முடிந்து, சிறைக்குக் கிளம்பும் முன், தன் உறவினர்களிடம் கண்ணீர் மல்க இராபர்ட் பயஸ் கூறிய வார்த்தைகள் இவை.

சிறையில் இருக்கும் ஏழு பேர்
சிறையில் இருக்கும் ஏழு பேர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவர் இராபர்ட் பயஸ். இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அங்கு நிலவிவந்த போர்ச்சூழல், நெருக்கடியின் காரணமாக 1991-ல் தன் குடும்பத்தினருடன் தமிழகம் வந்தார். சென்னை போரூரில் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். அப்போதுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவருகிறார்.

இந்தநிலையில், தன் மகனின் திருமணத்துக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு மனு அளித்து இருந்தார். ஆனால், அவரது மனுவை சிறைத்துறை பரிசீலிக்கவில்லை. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, பயஸுக்கு பரோல் வழங்குவது குறித்து சிறைத்துறையின் ஆலோசனையைப் பெற்று அவருக்கு பரோல் வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு மாதகால பரோல் வழங்கப்பட்டது. கடந்த நவம்பர் 25-ம் தேதி அவர் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இராபர்ட் பயஸ்
இராபர்ட் பயஸ்

கடந்த ஒருமாத காலம் அவரின் வழக்கறிஞர் சந்திரசேகர் வீட்டில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்தார் பயஸ். அங்கிருந்தே தன் மகனின் திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார். நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு யாரையும் சந்திக்கவோ பத்திரிகைக்கு பேட்டியளிக்கவோ அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவரைச் சந்தித்துச் சென்றனர். இந்நிலையில் இன்று மதியம் சரியாக 2.30 மணிக்கு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இராபர்ட் பயஸ்.

விடைபெறுவதற்கு முன்பாக மிகவும் உருக்கமாகத் தன் உறவினர்களிடத்தில் விடைபெற்றதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேசினோம்...

''18 வயசுலேயே பயஸுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவனுக்கு மட்டுமல்ல, அந்தக் காலத்துல ஈழத்துல இருந்த எல்லா இளவட்டப் பசங்களுக்கும் சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடும். கல்யாணம் ஆகாத பசங்களைத்தான் இலங்கை ராணுவமும் இந்திய அமைதிப்படைக்காரங்களும் அடிக்கடி விசாரிக்கக் கூட்டிட்டுப் போவாங்க. அப்படிப் போனவங்க பலபேர் திரும்பி வந்ததே இல்லை. வர்றவங்களும் பலத்த அடியோடும் காயத்தோடும்தான் வெளியே வருவாங்க. அங்க போர் நெருக்கடி இருந்ததால சென்னைக்கு தன் குடும்பத்தோடடு வந்தான் இராபர்ட் பயஸ். அவன் மகன் இங்க சென்னையிலதான் பிறந்தான். அவன் 3 வயசு கைக்குழந்தையாக இருக்கும்போது ராஜீவ் காந்தி கொலைக்கேஸுல அவனை சிறையில பிடிச்சுப் போட்டாங்க

இராபர்ட் பயஸ்
இராபர்ட் பயஸ்

அவன் வீட்டுக்கு எதிர்க்க இருந்த டாக்டர் ஒருவர், ராஜீவ் காந்தி செத்ததுக்கு அடுத்த நாள், பயஸ் தன் வீட்டுக்கு வெளியில வெடி வெடிச்சுக் கொண்டாடினதா வாக்குமூலம் கொடுத்தார். அதுதான் அவனுக்கு எதிராக இருந்த முக்கிய சாட்சியம். நீங்களே சொல்லுங்க... யாராவது கொலை செஞ்சிட்டு வெடி வெடிச்சுக் கொண்டாடுவாங்களா? அதுகூட பரவாயில்ல, இந்தக் கேஸுல இன்னொரு குற்றவாளியா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகனுக்கு, அந்த டாக்டரோட ஹாஸ்பிட்டல்ல பல் பிடுங்கினதா வாக்குமூலம் தயார் செஞ்சாங்க. ஆனா, முருகனுக்கு எந்தப் பல்லும் இதுவரை பிடுங்கினதே இல்லைன்னு நீதிபதி முன்னாடியே அது உண்மையில்லைன்னு நிரூபிச்சாச்சு.

``எனக்கென்று உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு கனவு இருக்கிறது. நானும் ஒரு நாள் என் தாய் நிலத்துக்குத் திரும்புவேன். வெண்மணல் செறிந்த என் கடற்கரையில் காலாற நடப்பேன். நிலாப்பொழுதுகளில் நான் பால்யத்தில் விளையாடிய என் வீதிகளில் நடந்து திரிவேன். உடலெங்கும் என் தாய் நிலத்தின் மண்ணைக் குழைத்துப் பூசிக்கொண்டு வெற்றுடம்போடு எம் நிலத்தில் கிடப்பேன். அந்தக் கனவு மெய்ப்படும் பொழுதில்தான் நான் முதன்முதலாகச் சிரிப்பேன்.’’
இராபர்ட் பயஸ்

இவன் பக்கம் நியாயம் இருந்தாலும் இத்தனை வருஷம் சிறைக்கொடுமைகளை அனுபவிச்சுட்டான். சின்ன பையனா உள்ள வந்தவனுக்கு இப்போ 50 வயசுகிட்ட ஆயிடுச்சு. அவன் மகனுக்கே 32 வயசு. அவன் டிப்ளமோ படிச்சுட்டு நெதர்லாந்துல வேலைபார்த்துட்டு இருக்கான். அவனுக்கு தமிழ்க்கோன்னு தூய தமிழ்ப்பேருதான் வச்சிருக்கிறான். ஒரேயொரு முறை, கடந்த 2010-ம் வருஷம் சிறைக்கு அவன் மகன் வந்தப்போ அவனைப் பார்த்ததுதான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்ல.

தன் சகோதரியுடன் இராபர்ட் பயஸ்
தன் சகோதரியுடன் இராபர்ட் பயஸ்

ஒரு தகப்பனா அவனுக்கு ஏதுமே செய்யல. கல்யாணமாவது செய்து வச்சிடணும்னுதான் பரோல் கேட்டு வெளியே வந்தான். கடந்த 30 வருஷத்துல அவன் இப்போதான் முதல்முறையா பரோல்'ல வெளியே வர்றான். வர்ற ஜூலை மாதம் அவன் மகனுக்கு சென்னை திருப்போரூர் முருகன் கோயில்'ல கல்யாணம். அவன் தலைவருக்கு அங்கதான் கல்யாணம் நடந்ததுன்னு அங்க வச்சுருக்கான். அவங்க மனைவியும் ஈழத்துல இருந்து வர்றாங்க. திருமண வேலைகளையெல்லாம் முடிச்சுட்டான்.

ஒரு மாசம் ரொம்ப சந்தோஷமா இருந்தான். ஆனாலும், காவல்துறை பாதுகாப்புடன் இருந்தது கொஞ்சம் கஷ்டமாதான் அவனுக்கு இருந்தது. காவல்துறையினர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இவனும் விதிகளை மீறாம சரியா இருந்தான். முழுமையா விடுதலையாகி வெளியே வரணும்கிறதுதான் அவனோட ஆசை. ரொம்ப சின்ன வயசுலயே சிறைக்குப் போயிட்டான். சீக்கிரம் விடுதலை ஆகணும், வெளியே வந்து மனைவி, மக்களோட வாழணும், அதுதான் எங்களோட ஆசையும்'' என்கிறார்கள் உருக்கமாக.

எங்கே சறுக்கியது அமித் ஷாவின் கணக்கு... ஜார்க்கண்டில் பா.ஜ.க  தோல்வியடைந்தது ஏன்?
அடுத்த கட்டுரைக்கு